Published : 28 Jun 2020 11:31 AM
Last Updated : 28 Jun 2020 11:31 AM
முதல்வர், அமைச்சர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஊடகத்துறையினரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்த அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழ் நாட்டில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கரோனாவால் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கரோனாவைக் கட்டுப்படுத்து வதில் அரசு முழு கவனம் செலுத்தவேண்டும். திருமணம், கோயில் விழாக்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். தங்களது பிள்ளைகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்த வேண்டுமென பல்வேறு கனவுகளோடு இருந்த குடும்பங்கள்கூட இன்று கரோனா அச்சத்தால் முக்கிய குடும்ப உறுப்பினர்களோடு திருமண விழாக்களை முடித்துக் கொள்கின்றனர்.
ஆனால், தமிழக அரசு நிகழ்ச்சிகள் நின்றபாடில்லை. மாறாக, முன்னைவிட அரசு நிகழ்ச்சிகள் அதிகரித்து வருவது அச்சமளிக்கிறது. பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து மக்களுக்கான கருத்துக்களை வீடியோ பதிவுகளாக அனுப்பி வைக்க மறுப்பது செய்தியாளர்கள் மத்தியில் நோய் தொற்று தீவிரமடைய வழி வகுக்கிறது. அதற்கு முதல் பலி ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் என்பதை உணர வேண்டும்.
மேலும், எண்ணற்ற செய்தியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கரோனோ தொற்றுக்கு ஆளாகி கடும் போராட்டத்தில் உயிர் பிழைத்துள்ளனர் என்பதை உணர வேண்டும். வேல்முருகன் மரணம் மத்திய -மாநில அரசுகளின் பொருப்பற்ற செயலை உணர்த்துவதாக உள்ளது. இனியாவது தமிழக அரசு மக்களை மட்டும் கட்டுப்படுத்த முயற்சிப்பதும் தனிமைப்படுத்துவதும் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்திவிடாது என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கரோனா தொற்றால் மரணமடைந்த வேல்முருகன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் விவசாயிகள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கி ஆதரவளித்திட தமிழக அரசு முன் வரவேண்டுகிறேன். கரோனா பேரழிவில் மக்கள் சிக்கி தவிக்கும் போது மத்திய அரசு தொடர்ச்சியாக மக்களுக்கு எதிரான திட்டங்களை சட்டமாக்குவதும், கொள்கை முடிவெடுப்பதும் அரசின் பொறுப்பற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாக்குகிறது. அரசின் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்கிற இந்த நிலைப்பாடு வேதனையளிக்கிறது.
இதையெல்லாம் எதிர்த்து அரசியல் கட்சிகள், பொதுமக்கள், விவசாயிகள்கூட போராட அச்சப்பட்டு முடங்கியுள்ளனர். பாராளுமன்ற, சட்டமன்றங்களில் எடுக்க வேண்டிய முடிவுகளை அதிகார வர்க்கம் தன்னிச்சையாக எடுப்பதை கைவிடுவது தான் அரசியல் நாகரிகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT