Published : 28 Jun 2020 07:36 AM
Last Updated : 28 Jun 2020 07:36 AM

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை

சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களை கரோனா தடுப்பு களப்பணி மற்றும் மண்டல கட்டுப்பாட்டு அறைகளில் பணியில் ஈடுபடுத்த தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சென்னை மாவட்டச் செயலாளரான ஜஸ்டின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு பணிக்கு 50 வயதுக்குட்பட்ட ஆசிரியர்களைஅவர்களின் விருப்பத்தைக் கேட்டு கரோனா தொற்று தடுப்பு, கவுன்சலிங் வழங்குவது, தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் சுமார் 1,200 ஆசிரியர்கள் தொடர்ந்து ஷிப்ட் அடிப்படையில் கரோனா தடுப்பு மற்றும் மண்டல கட்டுப்பாட்டு அறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேவை அடிப்படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை இப்பணிக்கு அழைக்கவில்லை. பணியில் உள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான நோய் தடுப்பு சாதனங்களோ அல்லது கட்டுப்பாட்டு அறைகளில் சமூக இடைவெளியோ, தனி மனித விலகலோ கடைபிடிக்கப்படு வதில்லை.

விருப்பத்துக்கு மாறாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்குகூட களப்பணி வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதியோ, உணவு போன்ற பிற அத்தியாவசிய வசதிகளோ செய்து தரப்படவில்லை. எனவே ஆசிரியர்களின் விருப்பத்துக்கு மாறாகவோ அல்லது போதிய நோய் தடுப்பு சாதனங்கள் வழங்காமலோ மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x