Published : 27 Jun 2020 09:54 PM
Last Updated : 27 Jun 2020 09:54 PM
கரோனாவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிறுவனம் இன்னும் வங்கி கடனை வழங்காமல் அந்த நடைமுறையை இன்னும் செயல்பாட்டிலே உள்ளதாக ஆர்டிஐ கேள்விக்கு பதில் கூறியுள்ள மத்திய சுகாதாரத்துறை தெளிவான விவரங்களை கூறாமல் மழுப்பலான பதிலை வழங்கியுள்ளது.
இந்தியாவின் பிற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நேரடியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், தமிழகத்திற்கான மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜெய்கா(JICA- Japan International Cooperation Agency) நிறுவனத்திடம் மத்திய அரசு கடன் கேட்டது. ‘ஜெய்கா’ நிறுவனம் உயர் அதிகாரிகள் குழு, தோப்பூரில் வந்து ஆய்வு செய்து சென்றனர்.
அவர்கள், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, கடந்த 2015ம் ஆண்டு முதல் இடம் தேர்வில் மத்திய, மாநில அரசுகளின் முரண்பாடு, அறிவித்த நிலத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் நிலத்தை ஒப்படைப்பு செய்வது, நிதி ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சிக்கல்களை சந்தித்து வந்தநிலையில் தற்போது கடைசியாக ‘கரோனா’ உருவில் சோதனையை சந்தித்துள்ளது.
மதுரை திருநகரை சேர்ந்த மணி என்பவர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி எப்போது தொடங்கும், அதற்கு ஜப்பான் நிறுவனத்திடம் கடன் பெறும் நிலை எந்தளவுக்கு உள்ளது மத்திய சுகாதாரத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்விகள் கேட்டு அனுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஜப்பான் நாட்டின் JICA நிறுவனம் கடன் வழங்கியதும், கட்டிட கட்டிடத் திட்டம் தயாரித்தல், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் கடன் அனுமதிக்கப்பட்டவுடன் கட்டிடத் திட்டம் தயாரிப்பது, டெண்டர் விடுவது உள்ளிட்டவை தொடங்கி கட்டுமானப்பணி தொடங்கும்.
தற்போது JICA நிறுவனம், மதுரை எய்ம்ஸ்க்கு கடனை அனுமதிப்பதற்கான விஷயம் செயல்பாட்டில் உள்ளது, ’’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். கடன் பெறும் விவரம் எந்தநிலையில் இருக்கிறது என்பது கூட தெளிவாக குறிப்பிடவில்லை. 2022ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியை முடிக்க திட்டமிட்டிருந்தநிலையில் ஜப்பான் நாட்டு நிறுவனம், தற்போது வரை நிதி ஒதுக்கவில்லை. அதனால், நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிடப்பட்ட 2022ம் ஆண்டில் முடிய வாய்ப்பே இல்லாததால் அதன் திட்டமதிப்பீடு மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT