Published : 27 Jun 2020 07:16 PM
Last Updated : 27 Jun 2020 07:16 PM
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புவனேஸ்வரி தம்பதியருக்கு ஜூன் 8-ம் தேதி அறந்தாங்கி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வலது முழங்கால் பகுதியில் ஒரு ரத்தக்கட்டி இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் தலைமையில் நுண்கதிர் மருத்துவர் ஸ்டாலின், இதய நோய் நிபுணர் நாச்சியப்பன், மயக்க மருத்துவத் தலைமை மருத்துவர் சாய்பிரபா, குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் பாலசுப்ரமணியம், தலைமை குழந்தை மருத்துவர் இங்கர்சால், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
பின்னர், அக்குழந்தைக்கு அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ மற்றும் எக்கோ உள்ளிட்ட கருவிகள் மூலம் பரிசோதனைகள் செய்த பின்னர் 18-ம் தேதி 3 மணிநேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதற்குப் பிறகு ரத்தநாளக் கட்டி அகற்றப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஹீமாஞ்சியோமா எனும் குறைபாட்டினால் ரத்தக் குழாயை உருவாக்கும் திசுக்கள் தோலிலும், தோலின் அடிப்பகுதியிலும் கருவிலேயே புகுந்து விடுவதால் ரத்தநாளங்கள் ஒரு முடிச்சாக உருவாகிக் கட்டியாக மாறிவிடும்.
மிக அரிதாகவே ஏற்படும் இந்தக் கட்டியில் காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் புண் உருவாகி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எந்த ரத்தக் குழாயில் இருந்து இந்த ரத்தநாள முடிச்சுகள் உருவாகின என்று கண்டறிந்து அந்த ரத்த நாளத்தில் இருந்து இந்தக் கட்டியைப் பிரித்து மிக நுண்ணிய அளவிலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
அதன்பிறகு, தொடைப்பகுதியில் இருந்து தோல் எடுத்து ஒட்டாமல், இருக்கும் இடத்திலேயே நவீன முறையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது பாராட்டத்தக்கதாகும்.
இரு தினங்களில் இக்குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளது. இந்த சிகிச்சை தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாகச் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT