Published : 27 Jun 2020 04:35 PM
Last Updated : 27 Jun 2020 04:35 PM
கரோனா அச்சத்தில் பணிநியமன ஆணை வழங்கியும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் செவிலியர்கள், மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில் சேரவில்லை.
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் நகர, கிராமப்பகுதிகளில் பரவி வரும் கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கரோனா வார்டுகளில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசியன்கள், மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கரோனா தடுப்பு சிறப்பு பணிக்காக இரு கட்டங்களாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை தமிழக அரசு தேர்வு செய்தது.
மருத்துவp பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) மூலம் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள், மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணிஆணை அனுப்பட்டது. குறிப்பாக கரோனா அதிகமாக உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா வார்டில் பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் கரோனா அச்சத்தில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் செவிலியர்கள், மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலையில் சேரவில்லை. இதனால் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் தேர்வெழுதி தேர்ச்சிபெற்ற செவிலியர்களில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டு 3 நாட்களுக்குள் பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயிர் பாதுகாப்பு கருதி பணியில் சேர்வதற்கு அதிகமானோர் தயக்கம் காட்டி வருவதால் கரோனா வார்டுகளை நிர்வகிப்பதற்கு சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையினர் கூறுகையில்; மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை கரோனா சிறப்பு பணிக்காக 6 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்வதற்கு பணி ஆணைகள் அனுப்பப்பட்டும் பெரும்பாலானவர்கள் வேலையில் சேரவில்லை. தாமதமாக பணியில் சேர்வதாக பலர் கடிதம் அனுப்பி உள்ளனர். 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கரோனா சிறப்பு பணிக்கு வராததால் புதிதாக பணிநியமன ஆணைகள் அனுப்பப்பட்டு வருகிறது என்றனர்.
இது தொடர்பாக பணியில் சேராமல் புறக்கணித்து வரும் செவிலியர்களிடம் கேட்டபோது; மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழக அரசு நியமனம் செய்த செவிலியர்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலே வேலை பார்த்து வருகின்றனர். பிற செவிலியர்களை போன்று ஒரே பணியை மேற்கொண்ட போதும் மாதம் ரூ.14 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதற்கிடையே தற்போது 6 மாத ஒப்பந்த அடிப்படையில் கரோனா வார்டுகளில் பணிக்கு செவிலியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நியமனங்கள் கரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயிரை பணயம் வைத்து முழு கவசஉடைகளுடன் பணியாற்றும் அதே நேரம் ஊதியமும் குறைவாக இருப்பதுடன், பணி நிரந்தரமும் இல்லாததால் பணியில் சேரவில்லை.
கரோனா தடுப்பு அவசர தேவை கருதி பணி நிரந்தரத்துடன் நியமன ஆணை வழங்கினால் வேலையில் சேர தயாராக இருக்கிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT