Published : 27 Jun 2020 03:55 PM
Last Updated : 27 Jun 2020 03:55 PM

தாய்க்குக் கரோனா; குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா?- குழந்தைகள் நல மருத்துவர் விளக்கம்

கோப்புப்படம்

ஊடகங்கள் வாயிலாக எங்கோ தூரத்தில் கரோனா இருப்பதை அறிந்து கொண்ட காலம் போய் இப்போது நம் வீட்டுக்கு அருகிலேயே கரோனா தொற்று வந்துவிட்டது. வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் இந்த தாக்கம் அதிகமாகி விட்டதாகச் சொல்லப்படும் நிலையில், கரோனாவிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க வேண்டுமே என்ற கவலை பெற்றோருக்கு முன்னைவிட அதிகமாகி இருக்கிறது

அதிலும் பாலூட்டும் தாய்மார்கள் பலருக்கும், தங்களுக்குக் கரோனா வந்தால் குழந்தைக்கு பாலூட்ட முடியுமா? என்ற சந்தேகமும் பயமும் இருக்கிறது. இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ஹபிபுல்லாவிடம் பேசினேன்.

“வெளிநாட்டில், பிறந்த குழந்தைக்குக் கரோனா தொற்று இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கிருமி அவ்வளவு நுட்பமானது. சின்ன இடைவெளி கிடைத்தாலும் அது நம்மைத் தொற்றிக் கொள்ளும். சென்னையில் இப்போது தினமும் நூறு குழந்தைகளுக்குக் குறையாமல் கரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆனால், பெரியவர்களைவிட அவர்கள் விரைவில் அதில் இருந்து மீண்டு விடுகிறார்கள்.

தாய், குழந்தை இருவருக்குமே கரோனா இருந்தால், அதுவும் இருவருக்குமே மிதமான அளவில் மட்டுமே அறிகுறிகள் இருந்தால் தாராளமாகத் தாய் தனது குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். குழந்தைக்குக் கரோனா தொற்று இல்லாமல், தாய்க்கு மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அது தீவிர அறிகுறிகளைக் கொண்டிருக்காவிட்டால் சில பாதுகாப்பான அம்சங்களோடு குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். குழந்தை பால் குடித்து முடிந்ததும் அதன் முகத்தை துடைத்துக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்பால்தான் உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஆதாரம். அப்படி குழந்தைக்கு நேரடியாகப் பால் கொடுத்தால் கரோனா வந்துவிடுமோ என அச்சப்படுபவர்கள் பாலைச் சேகரித்து, சங்கு மூலம் கொடுக்கலாம். இயல்பாகவே தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தைக்கு அது கிடைப்பது மிகமுக்கியம்.

முன்பெல்லாம் சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் பெண்கள்தான் குழந்தைக்குக் கொடுக்க பால் சுரக்கவில்லை எனச் சொல்வார்கள். ஆனால், இப்போது குமரி மாவட்டத்திலேயே அதிகமானோர் அப்படிச் சொல்கிறார்கள். இதுபோன்ற சிக்கலில் இருப்பவர்கள் தங்களுக்கு நோய்த் தொற்று இருந்து குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகியிருந்தால் ஊட்டச்சத்துப் பொடிகளை வாங்கி மாட்டுப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

அத்துடன், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் போடுவதும் கட்டாயம். ஆனால், இரவிலும் பகலிலும் குழந்தைகள் தூங்கும் போது மூச்சுவிடுவதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அந்த நேரத்தில் அவர்களுக்கு முகக்கவசம் வேண்டாம்” என்றார் மருத்துவர் ஹபிபுல்லா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x