Published : 27 Jun 2020 02:42 PM
Last Updated : 27 Jun 2020 02:42 PM
பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக அரசின் முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.
கிராமப்புறங்களில் அதிவேக இணைய இணைப்புகளைத் தரும் மத்திய அரசின் திட்டம் பாரத்நெட் திட்டம். தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட சமூக நல அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரினை நேற்று (ஜூன் 26) மத்திய அரசு விசாரித்தது. அதன் முடிவில், பாரத்நெட் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 27) தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு தமிழக அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களுக்காக இந்த டெண்டர் விதிமுறைகளை தமிழக அரசு சட்ட விரோதமான முறையில் மாற்றியதாக பல்வேறு தரப்பினரும் எழுப்பிய குற்றச்சாட்டுகள் இதன் மூலம் உண்மையாகியிருக்கின்றன.
இது ஆரம்பம்தான்...! துறைகள் தோறும் பங்காளிகள், சம்பந்திகள் எனச் சுற்றத்திற்காக இஷ்டம் போல வாரி வழங்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகள் இனி ஒவ்வொன்றாக வெளியில் வரும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கிராம ஊராட்சிகளை இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால் மத்திய அரசு அந்த டெண்டரை ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. 1/3 @CMOTamilNadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 27, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT