Published : 27 Jun 2020 01:59 PM
Last Updated : 27 Jun 2020 01:59 PM
நெல்லையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்குச் சித்த மருத்துவத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா சிகிச்சைக்கு அரசு சித்த மருத்துவர்களைப் பயன்படுத்துவது குறித்து முறையாக அறிவிக்காததால் மருத்துவர்கள் மத்தியில் நோயாளிகளைக் கையாள்வதில் மிகப்பெரிய தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனா நோயாளிகளுக்குச் சித்த மருத்துவ முறையில் சிகிச்சையளித்து அவர்களை நோயின் பிடியிலிருந்து மீட்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கரோனாவின் தொடக்கத்தில் இருந்தே நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியானது வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தும் முகாமாகச் செயல்பட்டு வந்தது. கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்கள் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, இந்தக் கல்லூரி கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையமாகவும் மாற்றப்பட்டது.
உடனடியாக இங்கு 21 உள்நோயாளிகள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே கரோனாவை எதிர்கொள்ளும் அளவுக்கு நல்ல உடல் நலமும், சிக்கலின்றி அதிலிருந்து மீளக்கூடியவர்களாகவும் அடையாளம் காணப்பட்டவர்கள். இங்குள்ள கரோனா வார்டு சித்த மருத்துவத்தை மையமாகக்கொண்டு இயங்கினாலும், இவர்களுக்கு சித்த மருத்துவர்கள் சிகிச்சையளிப்பது குறித்து அரசுத் தரப்பில் முறையான அறிவிப்பு வெளியாகாததால் கல்லூரியின் துறைத் தலைவர்கள் மட்டத்தில் சிலர் நோயாளிகளை அணுகத் தயங்குகின்றனர்.
இதன் நீட்சியாக, கல்லூரியின் பிற சிகிச்சை நிபுணர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களும் கரோனா நோயாளிகளை அணுகுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அரசு முறையான அறிவிப்பு வெளியிட்டால் சித்த மருத்துவர்களும் கரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் தீவிரமாகச் செயல்பட முடியும்.
இப்போது இந்தக் கல்லூரியில் சிலர் கரோனா பணிக்குத் தன்னார்வலர்களாகவும், சிகிச்சையளிக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து அரசு முறைப்படி அறிவிக்காததால் சிகிச்சையின்போது தங்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டால் அது பணிரீதியான தொற்றாகக் கவனத்தில் கொள்ளப்படாது என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி ஆகிய இரு இடங்களில் மட்டுமே சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. இரண்டு இடங்களிலுமே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முதல்வர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் போதிய மனிதவளம் இருந்தும் அதை முழுமையாகக் கரோனா வார்டில் பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளது.
அதேநேரம் கரோனா வார்டில் சித்த மருத்துவர்கள் அரசால் நியமிக்கப்பட்டுப் பணி செய்தால் அதன் மூலம் சித்த மருத்துவத்தின் பெருமையும் காக்கப்படும் என்கிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.
மத்திய அரசின் சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருந்துகள் ஆலோசனைக்குழு உறுப்பினரான இவர் இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் கூறுகையில், “கரோனா வார்டில் சித்த மருத்துவர்கள் பணிசெய்து அதன் மூலம் நோய் குணமானால் மிகப்பெரிய ஆவணமாகும். நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கரோனா வார்டு பணிகளுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கி, சித்த மருத்துவக் கல்லூரி புனரமைக்கப்பட்டு அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகளைப் பயன்படுத்தி கரோனா வார்டில் பணிபுரிய சித்த மருத்துவர்களை அரசே அழைப்பதன் மூலம் நமது பாரம்பரிய வைத்திய முறைக்கும் உரிய பெருமை கிடைக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT