Published : 27 Jun 2020 12:37 PM
Last Updated : 27 Jun 2020 12:37 PM

கோவை எம்ஜிஆர் காய்கனி மார்க்கெட்டில் மூவருக்குக் கரோனா: மார்க்கெட்டை இழுத்து மூடிய மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர்

கோவையில் முக்கிய வியாபாரத் தலங்களில் ஒன்றாக விளங்கும் எம்ஜிஆர் காய்கனி மார்க்கெட்டில் மூவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேரடியாகக் கள ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், அந்த மார்க்கெட் இயங்கத் தடை விதித்துள்ளார்.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா கோயில் அருகே எம்ஜிஆர் காய்கனி மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கே நீலகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் காய்கனிகள் அன்றாடம் குவிவது வழக்கம். இங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளிலும், ஏல மையத்திலும் மாநகரம் முழுக்க உள்ள மொத்த, சில்லறை வியாபாரிகள் காய்களையும், பழங்களையும் வாங்கிச் செல்வார்கள். எனவே, இங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளில் எப்போதுமே அதிகக் கூட்டம் இருக்கும்.

கரோனா தொற்று சூழ்நிலையில் இந்த மார்க்கெட்டில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வெங்காயம், தக்காளி ஆகிய மொத்த வியாபாரக் கடைகள் மார்க்கெட்டிற்கு எதிரேயுள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. மீதமுள்ள காய்கனி மொத்த வியாபாரம் பழைய எம்ஜிஆர் மார்க்கெட்டிலேயே செயல்பட்டு வந்தது. இங்கு பெரும்பாலான கடைக்காரர்களும், வாடிக்கையாளர்களும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இயங்கியதாகச் சொல்லப்படுகிறது. தவிர, சில வியாபாரிகள் மார்க்கெட் பாதைகளிலும், மழைநீர் வடிகால் அமைப்புகளின் மீதும் ஆக்கிரமிப்பு செய்து காய்கனி மூட்டைகளை வைத்து வியாபாரம் செய்து, கூட்ட நெரிசலை உண்டாக்கியிருந்தனர்.

இதனால் இங்கு தொற்று பரவியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், இரண்டு நாட்கள் முன்பு முதல் கட்டமாக இங்குள்ள 200 பேருக்குச் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இங்கு நேரடியாகக் கள ஆய்வு செய்த கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத், இந்த மார்க்கெட் இயங்கத் தடை விதித்தார்.

தொடர்ந்து இதன் சுற்றுப்புறங்களை ஆய்வுசெய்த ஆணையர், மார்க்கெட்டிற்கு அருகிலேயே இயங்கி வரும் தனியார் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தையும் சோதனையிட்டார். இந்த வளாகத்தினுள், பலர் உரிய அனுமதி ஏதும் பெறாமல் காய்கனி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான தக்காளி டிரேக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், பயன்படுத்தாத வாகனங்கள் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த வளாகத்தினுள் பணிபுரியும் நபர்கள் முகக்கவசம் அணியவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. எனவே, விதிமீறல் நடந்ததன் அடிப்படையிலும், பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டும், இருசக்கர வாகன நிறுத்துமிடத்தைப் பூட்டி சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்.

இது தவிர கோவை ஆர்.எஸ்.புரத்தில் இயங்கிவரும் உழவர் சந்தையைக் கள ஆய்வு செய்த ஆணையர், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுமாறும், முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அறிவுறுத்தினார்.

இப்படிக் கரோனா தொற்று ஏற்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையரே நேரடியாகக் களத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது மாநகராட்சி ஊழியர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x