Published : 27 Jun 2020 11:36 AM
Last Updated : 27 Jun 2020 11:36 AM
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை, மகன் இறந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது 302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கூடுதல் நேரத்தில் கடை திறந்து வைத்திருந்ததற்காக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீஸார் அடைத்தனர். இதில் இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சாத்தான்குளம் மரணம் தமிழகம் தாண்டி தேசிய அளவிலும் எதிரொலித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டதன் விளைவாகவே இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ் (கொலைக் குற்றத்திற்காக) வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
மாநில அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். கொல்லப்பட்டவர்களுக்குக் கொடுங் காயங்கள் இருந்தபோதிலும், அவர்களைக் காவல் அடைப்பு (ரிமாண்ட்) செய்த நீதித்துறை நடுவரின் நடவடிக்கை, (அருகேயே சிறை இருந்தநிலையில் அங்கே அடைக்காமல்) வெகுதூரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது.
மருத்துவர்கள் அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, சிறைக்கு அனுப்பியது மற்றும் சிறை அதிகாரிகள் அவர்களின் கொடுங் காயங்களைக் குறித்துக்கொள்ளாமல் அவர்களைச் சிறைக்குள் அனுமதித்திருப்பது முதலானவை குறித்து ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT