பாஜக சார்பில் 234 தொகுதிகளிலும் 1,170 காணொலி காட்சி கூட்டங்கள்: எல்.முருகன் அறிவிப்பு

பாஜக சார்பில் 234 தொகுதிகளிலும் 1,170 காணொலி காட்சி கூட்டங்கள்: எல்.முருகன் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக பாஜக சார்பில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,170 காணொலி காட்சி கூட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களை நேரடியாக சந்திக்க முடியாத நிலை உள்ளது. எனவே, தமிழக பாஜக சார்பில் 234 தொகுதிகளிலும் காணொலி கூட்டங்கள் நடக்க உள்ளது.

மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற காணொலி கூட்டங்கள் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன. இவற்றை இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் 18 லட்சம் பேர் கண்டு, கேட்டுள்ளனர். வரும் 28-ம் தேதி நடக்கும் காணொலி கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ் பேசுகிறார்.

பாஜக இளைஞரணி, மகளிரணி, விவசாய அணி, பிற்பட்டோர் அணி, எஸ்சி, எஸ்டி அணி, சிறுபான்மையினர் அணி ஆகியவற்றின் சார்பில் 234 தொகுதிகளிலும் இன்று (26-ம் தேதி) தொடங்கி ஜூலை 2-ம் தேதி வரை 1,170 காணொலி கூட்டங்கள் நடக்க உள்ளன.

பாஜக ஆட்சியின் சாதனைகள், கரோனா தடுப்புப் பணிகள், சுயசார்பு இந்தியா திட்டம் என்று தமிழகத்துக்கு கிடைத்த பயன்கள் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் காணொலி கூட்டங்களில் உரையாற்ற உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in