Published : 26 Jun 2020 05:27 PM
Last Updated : 26 Jun 2020 05:27 PM
கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளுக்கு இனி உதகை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு இதுநாள் வரையில் கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது வரை 51 பேருக்குத் தொற்று உறுதியானது. இதில், 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 27 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், உதகை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சை அளிக்கும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இனி வைரஸ் தொற்றுடைய நோயாளிகளுக்கு உதகை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று (ஜூன் 26) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, "நீலகிரி மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்காக 200 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 35 செயற்கை சுவாசக் கருவிகள், பரிசோதனை மையம் உள்ளன. உதகை, குன்னூர், கோத்தகிரி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது, அறிகுறி இல்லாத நோயாளிகளுக்கு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
உதகை மருத்துவமனையில் 34 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. கொலக்கொம்பை காவல்நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
உதகை நகரின் மையப்பகுதியில் மருத்துவமனை உள்ளதால், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
60-க்கும் மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், அறிகுறி உள்ளவர்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள்.
காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளவர்கள் 1077 எண்ணுக்குத் தகவல் அளித்தால், சுகாதாரத்துறையினர் வீட்டுக்கே வந்து பரிசோதனை மேற்கொள்வார்கள்" என்று ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT