Published : 26 Jun 2020 02:19 PM
Last Updated : 26 Jun 2020 02:19 PM
புதுச்சேரியில் இன்று மேலும் 30 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 26) மேலும் 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 534 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 322 ஆகவும் உயர்ந்துள்ளது. இதுவரை 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறியதாவது:
"புதுச்சேரியில் நேற்று 590 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் தற்போது 30 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 15 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 12 பேர் ஜிப்மரிலும், காரைக்காலில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பாதிக்கப்பட்ட நபர்களில் 8 பேர் ஏற்கெனவே தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 6 பேர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். முகக்கவசம் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒருவருக்கு 'பாசிட்டிவ்' வந்துள்ளது. மற்றவர்களுக்கு எவ்வாறு தொற்று வந்தது என்பது குறித்து விசாரிக்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் இதுவரை 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 210 பேர், ஜிப்மரில் 87 பேர், காரைக்காலில் 21 பேர், ஏனாம், மாஹே பிராந்தியங்களில் தலா ஒருவர், பிற பகுதியில் 2 பேர் என மொத்தம் 322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 8 பேர், ஜிப்மரில் 8 பேர் என மொத்தம் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் இதுவரை 210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 ஆயிரத்து 267 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
13 ஆயிரத்து 474 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 261 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன. தினமும் பரிசோதனைகள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தொற்றால் பாதித்த அனைவரையும் வைத்திருந்தால் பளு அதிகரிக்கும்.
இதனால் அறிகுறி இல்லாத கரோனா தொற்றுள்ளவர்களில் 19 பேரை பல் மருத்துவக் கல்லூரிக்கும், 25 பேரை அறுபடை வீடு மருத்துவக் கல்லூரிக்கும் மாற்றியுள்ளோம். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது அறிகுறி இருப்பது தெரிந்தால் அவர்களை மீண்டும் கதிர்காமம் மருத்துவக் கல்லூரிக்கு மாற்றி விடுவோம்.
இன்று காலை நான் மார்க்கெட்டுக்குச் சென்று பார்த்தபோது கூட்டம் அதிகமாக இருந்தது. தினமும் மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்கிச் செல்கின்றனர். மக்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது கரோனா அச்சுறுத்தல் உள்ள நேரம். கரோனா முடிந்த பிறகு தினமும் காலை, மாலையில் கூட மார்க்கெட் செல்லுங்கள். கரோனா நேரத்தில் தினமும் காய்கறி வாங்கச் செல்வது தவறு.
யார் மூலம் தொற்று பரவும் எனக் கூற முடியாது. 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை மார்க்கெட் சென்று வந்தால் போதும். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். இன்று 8 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளன. 18 பகுதிகளைத் தனிமைப்படுத்தியுள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT