Last Updated : 26 Jun, 2020 01:11 PM

1  

Published : 26 Jun 2020 01:11 PM
Last Updated : 26 Jun 2020 01:11 PM

புதுச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கடலில் மீனவர்கள் கருப்புக் கொடியுடன் போராட்டம்

கிரண்பேடிக்கு எதிராக மீனவர்கள் போராட்டம்

புதுச்சேரி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக, கடலில் படகுகளுடன் திரண்ட ஏராளமான மீனவர்கள் கருப்புக் கொடியுடன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. இந்தத் தடைக்காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அரசு ரூ.5,500 நிவாரணமாக அளித்து வருகிறது. இந்த ஆண்டு ஊரடங்கு தொடர்ந்த நிலையில், தடைக்காலமும் அறிவிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்தவுடன் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். ஆனால், இதுவரை புதுவையில் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்குவதற்குத் தடை விதித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்தார். ஓய்வூதியம் பெறுபவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடாதவர்கள் என்ற அடிப்படையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இந்த நடவடிக்கை எடுத்தார். இதற்கு 18 கிராம மீனவ பஞ்சாயத்தார், கடலோரத் தொகுதி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தடைக்கால நிவாரணம் வழங்க தடை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். மேலும், இன்று (ஜூன் 26) கடலில் கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதனிடையே, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்க வலியுறுத்துவதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நேரம் ஒதுக்கித்தர கடிதம் அளித்தனர். ஆனால், கிரண்பேடி அதற்கு நேரம் ஒதுக்காமல், மீன்வளத்துறை செயலர் விளக்கமளிப்பார் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 25) இரவு அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், மீனவப் பஞ்சாயத்தார் தரப்பில், "உள்நோக்கத்தோடு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மஞ்சள் கார்டு வைத்துள்ளவர்கள் வருமான வரிச் சான்றிதழும், ஒரு வீட்டில் ஒருவருக்கு மேல் ஓய்வூதியம் பெற்றால் தடைக்கால நிவாரணம் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும்" என மீனவப் பஞ்சாயத்தார் அறிவித்தனர்.

இதன்படி இன்று காலை தலைமைச் செயலகம் முதல் காந்தி சிலை வரையிலான பகுதியில் கடலில் மீனவர்கள் படகுடன் திரண்டனர். விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் என 300-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக்கொடி, கருப்பு பலூன் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்கரைச் சாலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி மற்றும் மீனவப் பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய, மாநில நலத்திட்டங்களைச் செயல்படுத்தவிடாமல் ஆளுநர் கிரண்பேடி தடுப்பதாக குற்றம்சாட்டி காலாப்பட்டு தொடங்கி, கடலூர் எல்லை வரை மூர்த்தி புதுக்குப்பம் வரை 18 மீனவ கிராமத்தினர் கருப்புக் கொடிபோராட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.

மீனவர்கள் படகுகளில் தலைமைச் செயலகம் அருகேயுள்ள கடற்பகுதிக்கு வருவதைத் தடுக்க போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது. தலைமைச் செயலக கடல் பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இப்போராட்டக்குழு தலைவர் தணிகாசலம் கூறுகையில், "கோரிக்கை தொடர்பாக ஆளுநர் கிரண்பேடிக்கு மனு தந்தோம். கடந்த ஆண்டை விட மீன்பிடி நிவாரணம் பெறும் மீனவ மக்களின் எண்ணிக்கை குறைப்பை ஏற்க முடியாது. நாங்கள் இன்று கடலில் மீன்பிடித்தொழிலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அத்துடன் படகுகள் பராமரிப்புத் தொகை தருவது, புயல் நிவாரணச் சேமிப்புத் தொகையை தருவது ஆகியவற்றில் ஆளுநர் தடையாக உள்ளார். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்து மீனவப் பெண்களுடன் வந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

ஆளுநர், புதுச்சேரி அரசுக்கு எதிராக நடந்த இப்போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தையொட்டியுள்ள தமிழகப் பகுதி மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மீன்வளத்துறை தரப்பில் விசாரித்தபோது, "மீன்பிடித் தடைக்காலம் நிவாரணம் தர பட்ஜெட்டில் ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிவாரணம் தர ஆளுநருக்குக் கோப்பை அனுப்பினோம். மீனவர்களில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவி வழங்க முடியாது என்று குறிப்பிட்டுக் கோப்பினை திருப்பி அனுப்பினார். இச்சூழலில் மீன்வளத்துறை செயலர் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தர உத்தரவிட்டுள்ளார். அதற்கு ஆளுநர் கிரண்பேடியும் ஒப்புதல் தந்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x