Published : 26 Jun 2020 12:52 PM
Last Updated : 26 Jun 2020 12:52 PM
வல்லரசு நாடுகளில் கூட கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத சூழலில், தமிழகத்தில் இந்த வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (ஜூன் 26) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள், கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
"இன்றைக்கு இந்தியாவில் பரவி வருகின்ற கரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கின்ற முயற்சியில் தமிழகம் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. திருச்சி மாவட்ட ஆட்சியர் தங்கள் மாவட்டத்தில் இந்த வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார். திருச்சி மாவட்ட ஆட்சியருடன், மாவட்ட நிர்வாகமும் சிறப்பான முறையில் கரோனா வைரஸ் தடுப்பு முயற்சியில் ஈடுபட்டு, அதன் பரவலைத் தடுக்கின்ற ஒரு நிலையைப் பார்க்கின்றோம்.
இந்தப் புதிய நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐசிஎம்ஆர், மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் சொல்கின்ற வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து, அதை மாவட்ட நிர்வாகம் முறையாகக் கடைப்பிடித்ததன் விளைவாக, வைரஸ் தொற்றை இன்றைக்கு நாம் தடுக்கின்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
உலக அளவிலேயே வல்லரசு நாடுகளில் கூட இந்த வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத ஒரு சூழல் இருக்கின்ற காலகட்டத்தில், தமிழகத்தில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து இன்றைக்கு கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015-ல் நடத்தினார். அதில், சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார். தமிழக அரசு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்றைக்கு முதலீட்டை ஈர்த்து, சுமார் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்தப் பணிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT