Published : 26 Jun 2020 12:26 PM
Last Updated : 26 Jun 2020 12:26 PM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், செல்போன் உதிரிபாகங்கள் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப உலகின் தகவல் தொடர்புச் சாதனங்களில் செல்போன்கள் மக்களின் ஆறாம் விரலாக மாறிவிட்டன. தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாகவே செல்போன் உள்ளது.
இந்தியாவில் 85 சதவீதம் மக்கள் செல்போன்கள் பயன்படுத்துவதாகவும், அதில் 65 சதவீதம் மக்கள் இணைய வசதியுடன் கூடிய, ஆண்ட்ராய்டு தொடுதிரை செல்போன்களைப் பயன்படுத்துவதாகவும், மீதமுள்ள மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் சாதாரண செல்போன்களைப் பயன்படுத்துவதாகவும், மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே செல்போன் பயன்படுத்துவதில்லை என்றும் 2019-ம் ஆண்டின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அனைத்துத் தரப்பினரையும் தன்வசப்படுத்தியுள்ள செல்போன்களில் பழுது ஏற்பட்டால், பழுது ஏற்பட்ட பாகத்தை மட்டும் மாற்றிக் கொண்டு வழக்கம் போல் பயன்படுத்த முடியும். இதனால் செல்போன் உதிரிபாக விற்பனைக்கு என நாட்டில் ஒரு தனிச் சந்தையே இயங்கி வருகிறது.
கரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், செல்போன் உதிரிபாகங்களின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் உதிரிபாகங்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த செல்போன் உதிரிபாக வியாபாரிகள் கூறுகையில், “இந்தியாவைப் பொறுத்தவரை, செல்போன்கள் மட்டுமல்லாமல், அவற்றுக்கான உதிரிபாகங்களும் 90 சதவீதம் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே கொரியா, பின்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. சீனாவில் இருந்து இந்தியாவிற்கு விற்பனைக்கு வருகின்ற செல்போன்களின் விலை, மற்ற நாட்டுத் தயாரிப்புகளைக் காட்டிலும் மிகவும் குறைவு என்பதால், இந்தியச் சந்தையில் சீனத் தயாரிப்பு செல்போன்களுக்கு வரவேற்பு சற்று அதிகம். இந்நிலையில் சீனாவில் இருந்து பரவிய கரோனா நோய்த்தொற்றால், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவுக்கு செல்போன்கள், உதிரிபாகங்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், பொழுதுபோக்குக்காகப் பொதுமக்கள் செல்போன்களைப் பயன்படுத்துவது அதிகரித்ததால், அவை பழுதடைவதும் அதிகரித்துள்ளன. இதனால் மொத்த வியாபாரிகளிடம் இருப்பு உள்ள உதிரி பாகங்கள் மட்டுமே சிறு வியாபாரிகள், சர்வீஸ் கடைகளுக்குக் கிடைக்கின்றன. செல்போன் உதிரிபாகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் செல்போனில் பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் இருமடங்கு செலவிட்டு, அவற்றைச் சரிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்றனர்.
இது தொடர்பாக கோவை மாவட்ட செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.மன்சூர் அலி கூறுகையில், ''பொது முடக்கத்தால் பொழுதுபோக்குக்காக மக்களிடையே தொடுதிரை செல்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. திரைப்படம் பார்ப்பது, 'கேம்' விளையாடுவது, காணொலி மூலமாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுதல் அதிகரித்துள்ளன.
தொடர்ச்சியான பயன்பாட்டால் ஸ்பீக்கர், தொடுதிரை, பேட்டரி, வால்யூம் சிஸ்டம் உள்ளிட்டவை பழுதடைவதும் அதிகரித்தது. பொதுமுடக்கத் தளர்வுக்குப் பின்னர், செல்போன்களின் பழுது நீக்க, மக்கள் சர்வீஸ் கடைகளுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையில் செல்போன் உதிரிபாகங்களை மொத்த விற்பனை செய்து வந்த 150-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனையாளர்கள், கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர்.
தற்போது இருப்பு வைத்துள்ள 70 மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே சிறு வியாபாரிகள் மற்றும் சர்வீஸ் நிலையங்களுக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்து வருகின்றனர். புதிதாக இறக்குமதி இல்லாததாலும், உதிரி பாகங்களுக்குத் தேவை அதிகரித்துள்ளதாலும், உதிரிபாகங்கள் இருமடங்கு விலையேற்றம் செய்யப்பட்டுள்ளன.
பொது முடக்கத்திற்கு முன்பு ரூ.1,300 ஆக இருந்த, செல்போன் டிஸ்பிளே பாகம், தற்போது ரூ.2,800-க்கு விற்கப்படுகிறது. இது சிறு வியாபாரிகள், சர்வீஸ் மையம் மூலம் பொதுமக்களைச் சென்றடையும்போது, விலை மேலும் அதிகரிக்கிறது. கப்பல், விமானங்கள் மூலமாக இந்தியாவில் இறக்குமதியாகும் செல்போன் உதிரிபாகங்களில் பெருமளவு மும்பை, புதுடெல்லியில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமாகவே கொள்முதல் செய்யப்படுகின்றன. அவர்கள் மூலமாகவே, தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு, சரக்கு வாகனங்கள், தரைப் போக்குவரத்து மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கும்போது மும்பை, புதுடெல்லி பகுதிகளில் இருந்து தென்மாநிலங்களுக்குக் கணிசமாக செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் வரத்தும் அதிகரிக்கும். விலையும் குறையும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT