Published : 25 Jun 2020 10:11 PM
Last Updated : 25 Jun 2020 10:11 PM
கரோனா ஊரடங்கால் ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் ஈரான் நாட்டில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை இன்று (வியாழக்கிழமை) சென்றடைந்துள்ளது.
இந்தக் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு 673 தமிழக மீனவர்கள் அழைத்து வரப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகத்திற்குதொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.
வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியான 'சமுத்திர சேது' என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.
அந்தவகையில் கரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை வியாழக்கிழமை சென்றடைந்துள்ளது. இந்த தகவலை இந்திய கடற்படை தனது டுவிட்டர் தளம் மூலம் உறுதிப்படுத்தி உள்ளது.
முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழக அரசு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ஜலஷ்வா கப்பல் மூலம் 673 தமிழக மீனவர்கள் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக வியாழக்கிழமை அதிகாலையே ஈரானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்துள்ள தமிழக மீனவர்கள் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் ஜலஷ்வா கப்பலில் மேலும் 34 தமிழக மீனவர்களை ஏற்ற வேண்டும் என்று ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வாயிலில் காத்திருக்கும் மீனவர்கள் வாட்ஸ் அப் காணொலி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ். முஹம்மது ராஃபி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT