Published : 25 Jun 2020 04:28 PM
Last Updated : 25 Jun 2020 04:28 PM
மதுரையில் கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, மதுரையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான கபசுர குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட தொகுப்புகளை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று வழங்கினார்.
இதன்பின், அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னை உட்பட 4 மாவட்டங்களைத் தொடர்ந்து, மதுரையிலும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பித்து, தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சியில் கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.
அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து, மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கவேண்டும். சவால்களை எதிர்கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
மதுரையில் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேண்டிய மருத்துவப் பரிசோதனை, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என, முதல்வர் அறி வுறுத்தியுள்ளார்.
அதற்கேற்ப மாவட்ட ஆட்சியர்களும் செயல்படுகின்றனர். தொற்று எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இது அவசியமற்றது.
தொற்றில் இருந்து எத்தனை பேர் காப்பாற்றப்படுகிறோம் என்பதைப் பார்க்கவேண்டும். குணமடைந்து சென்றவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
ஆங்கில மருத்துவத்துடன் சேர்த்து, சித்த மருந்துக்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறோம். காய்ச்சல் தடுப்பு முகாம்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற முகாம்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு தொற்றை எதிர்கொள்கிறோம்.
மக்கள் எச்சரிக்கை, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தளர்வுகளை முறையாக கையாளவேண்டும். மாவட்ட எல்லைப் பகுதிகளில் தேவையான மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. ஆனாலும், சோதனைச் சாவடிகளை தாண்டி வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதிக்க வேண்டும். முன்வரிசை ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு, நிவாரணம் அளிக்கப்படும் என, முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளது. பாதிப்பு கண்டறியும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி, நோய் தடுப்புக்கான சில மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவ நிபுணர்கள் வழிகாட்டுத லின்படி அவை பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், ஆயுதப்படை மைதானத்தில் நடமாடும் காய்ச்சல் தடுப்பு முகாம்களை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். ஆட்சியர் டிஜி. வினய், நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி சந்திரமோகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT