Published : 25 Jun 2020 03:41 PM
Last Updated : 25 Jun 2020 03:41 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.
மீன்பிடி தொழிலாளருக்கு கரோனா ஏற்பட்டதை தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டுள்ளது. குமரியில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
சென்னை, மற்றும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். மாவட்டத்திற்குள் கரோனா கட்டுக்குள் இருந்த போதிலும் கடந்த இரு வாரங்களாக வெளியூரில் இருந்து வருவோரால் வேகமாகப் பரவி வருகிறது. களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுவோர்களில் வெளியூர்களில் இருந்து வருவோரில் பெரும்பாலானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மீனவ கிராமமான தூத்தூரில் ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்டோர் தூத்தூரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தூத்தூர் மீனவ கிராமம் சீல் வைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார் என கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கரோனாவினால் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா சமூக பரவலாகி உள்ளதோ? என்ற அச்சம் நிலவி வருகிறது.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்தொழிலாளிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து துறைமுகம் மூடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அங்கு தீயணைப்பு துறை உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் துறைமுக பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதற்கு பரிசீலனை செய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT