Published : 25 Jun 2020 02:37 PM
Last Updated : 25 Jun 2020 02:37 PM
புதுச்சேரி மாநிலத்தில் தினமும் ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (ஜூன் 25) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் நேற்று 520 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இன்று 39 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் பரிசோதனைகளை அதிகரித்துக் கொண்டே வருகிறோம். கடந்த 4 தினங்களாக சராசரியாக 30 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிப்மரில் தற்போது சிகிச்சை பெறுவோரைத் தவிர்த்து, கூடுதலாக 300 படுக்கைகளைக் கொடுப்பதாக ஜிப்மர் இயக்குநர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். தினமும் 30, 40 பேர் எனப் பாதிக்கப்பட்டால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி விடும். அதன் பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என்று முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.
புதுச்சேரியில் 2 மணிக்கு மேல் கடைகளைத் திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பது பொதுமக்களுக்காக எடுத்த நடவடிக்கையாகும். வருவாய்க்காக புதுச்சேரி அரசு யோசனையே செய்யவில்லை. இன்று வரை நிறைய மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கொடுக்க முடியவில்லை. புதுச்சேரியில் கடந்த 3 மாதங்களாக முழு ஊதியம் கொடுத்துள்ளோம். இம்மாதம் கூட முழு ஊதியத்தைக் கொடுக்க முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார்.
மாநிலத்துக்கு வருவாய் வராவிட்டாலும் கூட மக்களுக்குப் பாதிப்பு இருக்கக் கூடாது என்று நம்முடைய அரசு நினைக்கிறது. சுகாதாரம், காவல், வருவாய் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் இணைந்து பணியாற்றினால் கூட மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசு ஒவ்வொரு வாரமும் தளர்வுகளைக் கொடுக்கிறது. அந்தத் தளர்வுகள் வந்தால் எதிர்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்புகள் வரும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அதுதான் தற்போது நடக்கிறது.
சுகாதாரத் துறைக்கு பட்ஜெட்டில் எத்தனை கோடி தேவை இருக்கிறது என்ற முழு விவரத்தையும் முதல்வரிடம் தெரிவித்தேன். அவரும் இருக்கிற நிதியில் அதிகபட்ச நிதியை சுகாதாரத் துறைக்கு கொடுப்பதாகக் கூறியுள்ளார். தினமும் ஆயிரம் பரிசோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கதிர்காமம் மருத்துவக் கல்லூரி, ஜிப்மர், நடமாடும் பரிசோதனை மையம், தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் என அனைத்தையும் சேர்த்து தினமும் ஆயிரம் பேருக்குப் பரிசோதனைகள் செய்யப்படும்.
மற்ற மாநிலங்களில் 'ஊரடங்கு போடுங்கள்' என மக்களே கூறுகின்றனர். அதேபோல் புதுச்சேரியிலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும். கரோனா பாதிப்பு தொடர்பாக காரைக்கால், மாஹே பிராந்தியங்களுக்கு திரும்ப ஒருமுறை செல்ல உள்ளேன். ஜூலை முதல் வாரத்துக்குள் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யாவிட்டால் யாருக்கும் எதுவும் கிடைக்காது. எனவே, மத்திய அரசு இன்று அல்லது நாளைக்குள் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்".
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT