Published : 25 Jun 2020 12:31 PM
Last Updated : 25 Jun 2020 12:31 PM
கரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க முகக்கவசம், தனிமனித இடைவெளிக்கு அடுத்தபடியாக அரசும் சுகாதாரத்துறையும் அதிகம் வலியுறுத்துவது அடிக்கடி கை கழுவுங்கள் என்பதே. கை கழுவுதல் என்பது, வலது கையை மட்டும் குழாய்க்கு நேராக நீட்டிவிட்டுப் போவதல்ல என்றும், இரண்டு கைகளையும் எப்படிக் கழுவ வேண்டும் என்று வீடியோ போட்டே விளக்கம் சொல்லிவிட்டார்கள் சுகாதாரத் துறையினர். போலீஸ்காரர்கள் முதல் சின்னக் குழந்தைகள் வரையில் அதை ஒரு நடனமாகவே ஆடி, டிக் டாக்கில் போட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டார்கள்.
தமிழ்நாடு அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் ஊருக்கு ஊர் மைக் போட்டும், துண்டுப் பிரசுரம் அடித்தும், முறையாகக் கை கழுவுங்கள், தினமும் குறைந்தது 10 முறையாவது கை கழுவுங்கள் என்று கூறுகின்றன. ஆனால், இப்போதும்கூட நம்மில் 80 சதவீதம் பேர் முறையாகக் கை கழுவவில்லை என்றே சொல்கிறார்கள். இதனிடையே, கோடைக் காலத்தில் இப்படி ஓயாமல் கைகழுவிக் கொண்டிருந்தால் தண்ணீர்த் தட்டுப்பாடு வராதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
''அடிக்கடி கை கழுவினால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படுமா?" என்று பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளரும், தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்க மாநிலச் செயலாருமான அ.வீரப்பனிடம் கேட்டபோது, "கரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிற, தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள்தொகையுள்ள சென்னையிலேயே கை கழுவியதால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்தி இல்லை. சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம் கூட சென்னையில் தண்ணீர் பயன்பாடு அதிகரித்திருப்பதாக இதுவரையில் எதுவும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், நம்மவர்கள் சொந்த வீட்டைவிட அலுவலகம், உணவகங்கள், தியேட்டர்களில்தான் கூடுதலாகத் தண்ணீரைப் பயன்படுத்துவார்கள்.
தற்போது பெரும்பாலான அலுவலகங்கள் இயங்கவில்லை. திறந்துள்ள அலுவலகங்களிலும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் தான் பணிபுரிகிறார்கள். எனவே, ஒட்டுமொத்தமாகக் கணக்குப் பார்த்தால், தண்ணீர்ப் பயன்பாடு குறைந்திருக்கவே வாய்ப்புள்ளது.
குளிப்பதற்கும், துவைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தும் தண்ணீரோடு ஒப்பிட்டால் கை கழுவுவதற்காகப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு ஒன்றும் பெரிதல்ல.
இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகளில் திருப்திகரமான தண்ணீர் இருப்பு இருக்கிறது. சென்னைக்குத் தண்ணீர் தருகிற பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் கடந்த ஆண்டு 1 டிஎம்சி தண்ணீர் கூட இல்லை. இந்தாண்டு 5 டிஎம்சிக்கும் மேல் தண்ணீர் இருப்பதாகவும், டிசம்பர் வரையில் தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை என்றும் மெட்ரோ வாட்டர் நிறுவனம் சொல்லியிருக்கிறது. காவிரி, தாமிரபரணி போன்ற ஆறுகளிலும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே, நிலத்தடி நீரும் கடந்த ஆண்டைவிட நல்ல நிலையில் இருக்கவே வாய்ப்பு அதிகம்" என்றார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கத்தின் (ஏஐடியுசி) கவுரவத் தலைவர் கே.கே.என்.ராஜனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "தமிழகத்தில் 8 கோடியே 20 லட்சம் பேர் இருப்பதால், அவர்கள் தினமும் 15 முறை கை கழுவினால் 1,640 மில்லியன் லிட்டர் தண்ணீர் செலவாகும் என்றும், முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைத் தவிர்த்துவிட்டாலும்கூட குறைந்தது 660 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்றும் யாரோ வாட்ஸ் அப்பில் கொளுத்திப்போட்டுவிட்டார்கள். உண்மையில் அவ்வளவு தண்ணீர் எல்லாம் செலவாகாது. ஆனால், பொதுமுடக்கம் காரணமாக வீடுகளில் தண்ணீர்ப் பயன்பாடு அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். குடிநீர் வாரியம் அளிக்கிற தண்ணீர் போக பலர் மோட்டார் மூலம் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அதிகமாகத் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இதனால் கிராமங்களில் இந்தக் கோடையிலும் கால்வாயில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது.
எனது கவலை எல்லாம், கழிவுநீர் வாயிலாகக் கொசு உற்பத்தியாகி வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டு விடக்கூடாதே என்பதில்தான் இருக்கிறது. ஏனென்றால், ஒரு தனிமனிதன் பயன்படுத்துகிற ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் 80 சதவீதம் கழிவுநீராக வெளியேறுகிறது. இந்தக் கணக்குப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் குடிநீர் வாரியம் விநியோகம் செய்கிற தண்ணீரிலேயே சுமார் 3,000 மில்லியன் லிட்டர் தண்ணீர் கழிவுநீராக வெளியேறும். ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீரையும் சேர்த்தால் இந்த அளவு இரு மடங்காகக்கூடும். குடிநீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் சுகாதாரத்தின் இரு கண்கள். அதை உணர்ந்து கழிவுநீர் அகற்றும் பணியில் அரசு கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
ஆகவே மக்களே, பொதுநலன் கருதியாவது அடிக்கடி கை கழுவுங்கள். தண்ணீர்த் தட்டுப்பாட்டை எல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT