Published : 25 Jun 2020 11:59 AM
Last Updated : 25 Jun 2020 11:59 AM
பூரி ஜெகந்நாதர் ஆலயத் தேரோட்டம் உச்ச நீதிமன்ற அனுமதியுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் ஆலயத் தேரோட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் தரப்பில் அதிருப்தி அலைகள் எழுந்துள்ளன.
அண்டை மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் தமிழகத்தில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணித் திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் பல்வேறு கருத்துகளை 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பகிர்ந்து கொண்டார்.
“சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மார்கழியில் ஆருத்ரா தரிசனமும், ஆனியில் வரும் திருமஞ்சனம் தரிசனமும் மிகச் சிறப்பானது. இந்த நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனித் திருமஞ்சன விழாவுக்காக நாளை மறுதினம் (ஜூன் 27) சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தேரோட்டம் நடக்க வேண்டும். ஆனால், தேரோட்டம் நடத்த அனுமதியில்லை என்று சொல்லிவிட்டார்கள். மறுநாள் நடக்கும் தரிசனத்துக்கும் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கே பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து தேரோட்டம் நடந்து முடிந்திருக்கிறது.
பூரி ஜெகந்நாதர் தேரோட்டம் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ஆலய நிர்வாகமும் மாநில அரசும் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று நீதிபதிகளுக்குப் புரியவைத்து, நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைப் பெற்று தேரோட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காமல் கோயில்களைத் திறக்கவே கூடாது என்று ஒற்றை வரியில் உத்தரவைப் போட்டிருக்கிறார்கள். அங்கு தேரோட்டம் நடக்க உச்ச நீதிமன்றம் சென்றார்கள். ஆனால், இங்கோ டாஸ்மாக்கைத் திறக்கத்தான் அரும்பாடுபட்டு உச்ச நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி வந்தார்கள்.
கோயில்கள் திறக்கப்படவில்லை என்றாலும் பூஜைகள்தான் முறைப்படி நடக்கிறதே என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், பூஜைகள் நடப்பது போலவே பக்தர்கள் வழிபடுவதும் முறைதான். பக்தர்கள் செல்வதால்தான் கோயில்களில் பூஜைகள் நடக்கின்றன. பூஜைகள் நடப்பதால்தான் பக்தர்கள் செல்கிறார்கள். இதுதான் ஆலயத்தின் தாத்பர்யம். வெறும் பூஜைகளை மட்டுமே நடத்துவது மட்டுமே ஆகமம் அல்ல. கிரியை, சரியை என்ற இரண்டும்தான் ஆகமம். அசம்பாவிதங்கள் நடக்கிறபோது ஒருநாள், இரண்டு நாள் மட்டுமே கோயில்களை மூடிவிட்டு பூஜைகள் செய்ய ஆகமம் அனுமதிக்கிறது. இப்படி மொத்தமாக மூன்று மாதம் மூடி வைப்பதை ஆகமம் அனுமதிப்பதில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு கோயிலுக்கு நேற்று சிறிய அளவில் கும்பாபிஷேகம் நடத்தி முடித்துவிட்டார்கள். தொடர்ந்து கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கோயில்களைப் பூட்டி வைத்தால் இனிமேல் கட்டுப்பாடுகளை மீறத்தான் செய்வார்கள். கும்பாபிஷேகத்துக்குத் தயாராகியுள்ள கோயில்களில் மக்கள் ஏகப்பட்ட பொருட்செலவில் திருப்பணிகளைச் செய்து வைத்திருக்கிறார்கள். இப்போது கும்பாபிஷேகம் நடக்கவில்லை என்றால் அந்த பொருட்செலவுகள் அத்தனையும் வீணாகிவிடும். திரும்பவும் வேலைகளைச் செய்ய அவர்களுக்குப் பொருளாதார பலம் கிடையாது.
நெற்றியில் சிவப்பும், வெள்ளையும் வைப்பதுதான் பக்தி என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். சிலர் கையில் கணக்கில்லாமல் கயிறுகளைக் கட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமே போதும் என்று நினைக்கிறார்கள். கோயில்களைத் திறப்பதற்கு ஆணைகள் பிறப்பிப்பதுதான் உண்மையான பக்தியின் வெளிப்பாடாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கோயில்களைத் திறக்கவும், பக்தர்கள் வழிபடவும் அனுமதி அளிக்க வேண்டும். திருநள்ளாறு, திருப்பதி கோயில்களில் எப்படி பக்தர்கள் அனுமதிக்கப் படுகிறார்களோ அதைப்போல எல்லா கோயில்களிலும் பக்தர்களை அனுமதிக்கலாம். பக்தர்கள் கட்டுப்பாடுகளை சரியாக கடைப்பிடிப்பார்கள். சிதம்பரம் நடராஜர் கோயியில் தேரோட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்ட நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் தரிசன விழாவிலாவது பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும்” என்றார் திருவடிக்குடில் சுவாமிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT