Published : 25 Jun 2020 11:30 AM
Last Updated : 25 Jun 2020 11:30 AM

11 ஆம் வகுப்புப் பாடத்திட்டம் மாற்றம்: தமிழக மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி; வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்

சென்னை

11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 25) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கைக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், அதனை மறைமுகமாக அல்ல, நேரடியாக நடைமுறைப்படுத்தும் திட்டத்தை ஓசை படாமல் எடப்பாடி பழனிசாமி அரசு செய்து வருகிறது.

நடப்புக் கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான பாடப்பிரிவுகள் மூன்று பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. மொழிப்பாடங்கள் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய பகுதிகளைத் தவிர்த்து, எஞ்சியுள்ள மூன்றாம் பகுதியில் முக்கியப் பாடங்களுக்கு என்று நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மொத்தம் 300 மதிப்பெண்கள் இருக்கும் வண்ணம் மூன்றே பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும் தலா 100 மதிப்பெண்கள்) மட்டுமே இருக்கும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பகுதி 1 - தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் பாடங்கள், பகுதி 2 - ஆங்கிலம், பகுதி 3 முக்கியப் பாடங்கள், அதில் முதல் பிரிவு கணிதம், இயற்பியல், வேதியியல் என்றும், இரண்டாம் பிரிவு இயற்பியல், வேதியியல், உயிரியல் என்றும், மூன்றாம் பிரிவு கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் என்றும், நான்காம் பிரிவு வேதியியல், உயிரியல், மனையியல் என்றும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த மதிப்பெண்கள் 600-க்கு பதில், இனி 500 ஆக இருக்கும் என்றும் மாணவர்கள் தாங்கள் உயர் கல்வி பயில விரும்பும் படிப்புக்கான பாடப்பிரிவு தேர்வினை 11 ஆம் வகுப்பில் சேரும்போதே இறுதி செய்துகொள்வதன் மூலம் கூடுதல் பாடங்களைப் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கின்றோம் என்ற போர்வையில் பாடத் திட்டங்களில் தமிழக அரசு மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளவற்றைப் பார்த்தால், தமிழகத்தின் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெரும் வாய்ப்புகளையே தட்டிப் பறிக்கும் கொடும் செயலாகவேத் தெரிகிறது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைக்காத மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயில விரும்பினால், மாற்றப்பட்ட பாடப்பிரிவுகளின் கீழ் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலும் பொறியியல் படிப்புகளில் சேர முடியாது.

ஏனெனில், பிரிவு மூன்று மற்றும் பிரிவு நான்கில் சேரும் மாணவர்கள் மருத்துவப் படிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் போடவே முடியாத நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய பாடப் பிரிவுகள் மூலம் சதித் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

மத்திய பாஜக அரசு திணித்துள்ள நீட் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புகளைக் கானல் நீராக்கி உள்ள நிலையில், தற்போது பொறியியல் கல்வி கனவையும் தகர்க்கும் நிலையைத் திட்டமிட்டே தமிழக பள்ளிக் கல்வித்துறை உருவாக்கி இருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஏனெனில், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகளில் வடநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் பாஜக அரசின் வஞ்சகப் போக்குக்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகி இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

எனவே, தமிழக அரசு 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x