Published : 25 Jun 2020 09:55 AM
Last Updated : 25 Jun 2020 09:55 AM

கோவில்பட்டி சிறையில் தந்தை - மகன் மரணம்: 8 கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

சாத்தான்குளத்தில் நீதிமன்ற காவலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 25) வெளியிட்ட அறிக்கை:

"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நீதிமன்ற காவலில் இருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறை தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை உலுக்கியுள்ள இச்சம்பவத்தில் இரண்டு துணை உதவி ஆய்வாளர்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. நடந்த சம்பவம் இரண்டு மனித உயிர்களை பலி வாங்கி இருக்கிறது. இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம் என்றே கூற வேண்டும்.

ஒவ்வொரு முறையும் காவல்துறையின் அதிகார அத்துமீறல், அப்பாவி மக்கள் மீது தாக்குதல், பொய் வழக்கு புனைதல், பாலியல் வன்முறை, சாதியக் கொடுமை, மனித உரிமை மீறல் போன்ற குற்றங்கள் மீது உரியமுறையில் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக மாறி இருக்காது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது காவல்துறையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டின் மீது தமிழக அரசு குறைந்தபட்ச நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதே சாத்தான்குளம் சம்பவத்திற்கு பின்புலமாக உள்ளது. குற்றம் செய்த காவலர்களை பாதுகாக்கக்கூடிய முயற்சியிலேயே அரசும் நிர்வாகமும் ஈடுபடுகின்றன. இதுதான் அதிகாரத்தில் இருப்பவர்களை குற்றம் செய்ய ஊக்குவிக்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதில் காவல் துறைக்கு மட்டும் எப்படி விதிவிலக்கு அளிக்க முடியும்? அனைத்து மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பதுதான் காவல்துறை மற்றும் அரசினுடைய கடமையும் பொறுப்புமாகும். உயிரை பறிப்பது அல்ல அவர்களது பணி.

இச்சூழலில், மக்களின் கொந்தளிப்பை தற்காலிகமாக குறைக்கும் நோக்கில் மேலோட்டமான சில நடவடிக்கைகள் எடுப்பது மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஏகோபித்த முழக்கமாக மாறியிருக்கிறது.

எனவே, இக்கொடுமையைக் கண்டித்தும், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர்/ கோட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை (ஜூன் 26) ஊரடங்கு நடைமுறையில் உள்ள மாவட்டங்கள் தவிர இதர மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழலில் கண்டிப்பாக தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும், வணிகர்களும் இயக்கத்தில் பங்கேற்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம். அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

கோரிக்கைகள்

* சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு, மனித உரிமை மீறல், பொய் வழக்கு போட்டது, மருத்துவ சிகிச்சையை மறுத்தது உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அனைவரையும் முதலில் இடைநீக்கம் செய்ய வேண்டும்.

* மனித உரிமை மீறல், காவல்நிலைய துன்புறுத்தல் காரணமாக கணவரையும், மகனையும் இழந்து வாடும் செல்வராணிக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். ஏற்கெனவே அறிவித்து இருக்கும் இழப்பீடு போதாது.

* ஜெயராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

* கரோனா நோய் தொற்று காலத்தில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோரை சிறையில் வைத்திட ஏன் உத்தரவிட்டார் என்பது சம்பந்தமாகவும், அவர்களுக்கு இருந்த காயங்களை பதிவு செய்யாதது தொடர்பாகவும் முழுமையாக விசாரணை செய்திட வேண்டும்.

* ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் உடலில் காயங்கள் இருந்தும் மருத்துவர்கள் அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பாமல் சிறைக்கு ஏன் அனுப்பினார்கள் என்பது குறித்தும், மருத்துவ பரிசோதனை பதிவேடுகளில் காயங்களை பதிவு செய்யாமல் மறைத்துள்ளார்களா என்பது பற்றியும் விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* அருகாமையிலுள்ள சிறையில் வைத்திடாமல் அதிக தொலைவில் உள்ள கோவில்பட்டி கிளை சிறையில் அனுமதித்தது குறித்தும், காயங்களை பதிவு செய்யாமல் காவல்துறையின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்தது குறித்தும் சம்பந்தப்பட்ட சிறைத்துறையினர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எண்.1, ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோர் இறந்து போனது தொடர்பாக நடத்தி வருகின்ற விசாரணையில் அனைத்து ஆவணங்களையும், காவல்நிலைய, கிளைச்சிறை சிசிடிவி பதிவுகளையும் உடனடியாக கைப்பற்ற வேண்டும்.

* காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் மரணம் என அங்கீகரித்து அதற்குரிய மேல் நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட வேண்டும்"

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x