Published : 24 Jun 2020 07:37 PM
Last Updated : 24 Jun 2020 07:37 PM
இந்தியா முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கண்காணிக்கப்படும் என
இன்று கூடிய மத்திய அமைச்சரவை, கொள்கை முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மத்திய அரசின் இந்த முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், "கூட்டுறவு வங்கிகள் மாநில அரசுகளின் நிர்வாகப் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டில் விவசாயிகளின் பங்களிப்போடு அவர்களைக் கொண்ட அமைப்பின் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. மேலும், நபார்டு வங்கியின் மூலம் நிதி உதவி பெற்றாலும் அதற்கான அனைத்து வங்கி உத்தரவாதங்களையும் மாநில அரசு வழங்குகிறது. வட்டி உள்ளிட்ட அனைத்து நிதிச் சுமைகளையும் மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன.
ஆண்டுதோறும் கடன் கொள்கைகளைத் திட்டமிடுவதையும், விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வட்டிச் சலுகையுடன் கடன் வழங்குவதையும் கூட்டுறவு வங்கிகள் செய்கின்றன. விவசாயிகளே திட்டமிட்டுச் செயல்படுத்தும் ஒரு ஜனநாயக அமைப்புதான் இந்தக் கூட்டுறவு வங்கிகள். அது மட்டுமல்லாமல் கிராமப்புற பொருளாதாரத்தையும் இது வெகுவாக ஊக்குவிக்கிறது.
ஆண்டுதோறும் இயற்கைச் சீற்றங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுமேயானால் கடன் குறித்த நிவாரணத்தை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படுகிறது.
எனவே, கூட்டுறவே நாட்டுயர்வு என்ற வரலாற்றுப் புகழுக்குச் சொந்தமான கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதின் மூலம் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதோடு மட்டுமல்ல... இது கூட்டாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலுமாகும். இது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. கிராமப் பொருளாதார வளர்ச்சியை முற்றிலும் முடக்கும் செயல் இது.
வங்கிகளில் பன்னாட்டு முதலீடுகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அதன் மூலம் பெரும் முதலாளிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் திட்டம் இதன் பின்னணியில் இருக்கிறதோ என்ற அச்சம் எழுகிறது. இதுகுறித்து தமிழக அரசு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்ளத் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இதனை ஏற்க மறுக்கும் பட்சத்தில் மிகத் தீவிரமான போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT