Published : 24 Jun 2020 06:25 PM
Last Updated : 24 Jun 2020 06:25 PM

மண்டல ரீதியிலான போக்குவரத்து ஜூன் 30 வரை ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றால் இ-பாஸ் கட்டாயம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும், வேறு மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் இன்று (ஜூன் 24) முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.

அக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் 7 முறை ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 12 ஒருங்கிணைப்புக் குழுக்களுடன் 3 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டு 4 முறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் 7 முறை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறை வல்லுநர்களுடன் 4 முறை ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவத்துறை வல்லுநர்களுடன் ஒருமுறை ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தியதன் விளைவாக, கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 'கோவிட் கேர் சென்டர்', 'கோவிட் ஹெல்த் சென்டர்' அமைத்து சிகிச்சை அளித்ததால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை மக்கள்தொகை நிறைந்த பெருநகரம். சுமார் 87 லட்சம் பேர் சென்னையில் வசிக்கின்றனர். இங்கு அதிகமாக குறுகலான தெருக்கள் இருக்கின்றன. சிறிய சிறிய வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் 6-7 பேர் வசிக்கின்றனர். பலரும் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் எளிதாகத் தொற்று பரவியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீடு, வீடாக அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை நடத்தப்படுகிறது. பிரச்சினை இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுமார் 600 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் சுமார் 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் செய்கிறோம்.

சென்னையில் 15 மண்டலங்கள் இருக்கின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை சென்னைக்கு என நியமித்துள்ளோம். இவர்கள் ஆய்வுப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மக்கள் வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக வழங்கப்படுகின்றன. தேவையான காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. நோய்ப்பரவல் உள்ள பகுதிகளில் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்கப்படுகிறது. பொதுக் கழிப்பறைகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு சென்னை மாநகர மக்கள் முழு ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருத்துவ முகாம்களில் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். நடமாடும் மருத்துவ வாகனங்கள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புறநகர் பகுதிகள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் பொதுப் போக்குவரத்து மூலம் மக்கள் சென்று வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், நோய்ப்பரவல் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், நாளை (ஜூன் 25) முதல் ஜூன் 30 வரை மண்டலங்களுக்குள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு மாவட்டத்துக்குள் மட்டுமே போக்குவரத்து இயக்கப்படும்.

எந்தெந்தப் பகுதிகளில் நோய்ப்பரவல் அதிகமாக இருக்கிறதோ, அந்தப் பகுதியை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவித்து அங்கு பரிசோதனைகளை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில எல்லைகளில் காவல்துறையினர் கவனத்துடன் இருந்து, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்வதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் மூலமாக அனுமதிக்கலாம். இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்திற்குள் மட்டுமே செல்ல அனுமதிக்க வேண்டும். வேறு மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம். மண்டலத்திற்குள் போக்குவரத்து வரும் 5 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x