Published : 24 Jun 2020 05:59 PM
Last Updated : 24 Jun 2020 05:59 PM

முழு ஊரடங்குகள் பல அமல்படுத்தப்பட்டும் தொற்று அதிகரிக்கக் காரணம் என்ன?- கி.வீரமணி கேள்வி

சென்னை

முழு ஊரடங்குகள் பல அமல்படுத்தப்பட்டும் நோய்த் தொற்று அதிகரிப்பது ஏன்? மருத்துவர்கள், நிபுணர்கள், எதிர்க்கட்சியினர் கூறுவதையெல்லாம் அரசு அலட்சியப்படுத்துவதுதான் முக்கியக் காரணம் என்ன? கரோனா எப்பொழுது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் கூறுவது ஆட்சிப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதல்லவா? என்று கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா தொற்று (கோவிட்-19) பரவல், இத்தனை ஊரடங்குகளுக்குப் பிறகும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உச்சகட்டத்திற்கு ஒவ்வொரு நாளும் சென்று கொண்டுள்ளது. இறங்குமுகம் தென்படவில்லை.

மத்திய அரசு கூறியவை கரோனா தடுப்பில் கைகொடுக்கவில்லை

மத்தியில் ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் ‘‘கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், யோகா செய்யுங்கள்’’ என்று கூறியவை எவையும் கரோனா தடுப்பில் கணிசமாகக் கைகொடுக்கவில்லை. தமிழக அரசோ, தொடக்கத்திலிருந்து இதில் அனைத்துக் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற மூத்த மருத்துவர்கள், மருத்துவத் துறை செயலாளர்களாகவும், நிர்வாகத் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த (ஓய்வு பெற்ற) காவல்துறை தலைமை அதிகாரிகள், ஏன் நீதிபதிகள் போன்றவர்கள், விஞ்ஞானிகள் கொண்ட தனித்தனி பணிக் குழு, (டாஸ்க் ஃபோர்சஸ்) ஆலோசனைக் குழுக்களை அமைத்து, தன்னார்வத் தொண்டர்களை பல பகுதிகளிலும் - தக்க குறுகிய பயிற்சி கொடுத்து, கரோனா ஒழிப்புப் பணியை தொடங்கியிருக்கவேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், மற்ற தமிழக கட்சிகள், சமூக அமைப்புகளின் தலைவர்களும் வற்புறுத்திக் கூறியும், தமிழக முதல்வரும், அரசும் தாங்கள் எடுத்ததே ஒரே முடிவு என்று கருதி, தானடித்த மூப்பாகவே நடந்துவந்ததுதான் மிச்சம்.

முன்யோசனையற்ற அறிவிப்புகளைக் கூறிவிட்டு, பிறகு வருத்தப்பட்டு என்ன பயன்?

பிரதமருக்கு, பல முக்கிய டாக்டர்கள் எழுதிய கடிதப்படி, எந்த நடவடிக்கையும் - மாற்றத்திற்குள்ளாகி நடைபெறவில்லை. மக்கள் ஒத்துழைப்பு என்பதுதான் இதில் முக்கிய அடிப்படை என்றாலும், மக்கள் கும்பல் கும்பலாகச் சேரும் நிலையை உருவாக்கிவிடும்.

யுத்த காலத்தில், யுத்தத்தை முன்னின்று நடத்தும் போர்ப் படை தளபதிகள், தொடர்ந்து தோல்வி ஏற்பட்டாலும், மனந்தளராமல் தங்களது போர் அறையில் அமர்ந்து, போர் முறையின் உத்திகளை மறுபரிசீலனை செய்து, மாற்றி வெற்றித் திக்குக்கு நாட்டை அழைத்துச் செல்வார்கள்.

கள ஆய்வில், தடுப்பில், தக்க மாற்றங்களைப் புகுத்த முன்வரவேண்டாமா?

அப்படி எந்த மாறுதலும் - இந்த கரோனா என்ற கண்ணுக்குத் தெரியாத தொற்றுக் கிருமிகளுடன் நடத்தும் போரில் தெரியவில்லை; கடந்த இரண்டு நாட்களாக பல முக்கிய அறிஞர்கள் - டாக்டர்கள் கூறும் கருத்துகளையாவது கவனத்தில் எடுத்துக்கொண்டு, கள ஆய்வில், தடுப்பில், தக்க மாற்றங்களைப் புகுத்த முன்வரவேண்டாமா?

பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ஹார்வர்டு குளோபல் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆசிஷ் ஜாவை பிரபல பேட்டியாளர் கரன் தாப்பர் பேட்டி கண்டு பேசியபோது, டாக்டர் கூறுகிறார்:

விரிவான திட்டம் தேவை!

‘‘ஊரடங்கைப் பொறுத்தவரை அது நீண்ட கால உத்தியாகாது. அடுத்த 12 மாதங்களுக்குக் கரோனா தொற்று இருக்கும் என்பது உண்மையானால், இந்த வைரஸை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கான விரிவான திட்டம் இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுகிறது.

பரிசோதனைகள் குறிப்பிடத்தக்க அளவுக்குக் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் - அதேபோன்று தொடர்பு தடமறிதலும், தனிமைப்படுத்தலும் இத்துடன் இணையவேண்டும்.

மாநிலங்களுக்கு உண்மையான ஆதரவு கிடைக்கவேண்டும். நோய்வாய்ப்படாதவர்களையும் பரிசோதிக்கவேண்டும். கரோனா தொற்று அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சுகாதார உள்கட்டமைப்பு (Health Infrastructure) வசதிகள் பெருக்கப்படல் வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையைப் பொறுத்தமட்டில், அது முடிந்த அளவுக்கு அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அமையவேண்டும் - பலி எண்ணிக்கை போன்றவற்றைக் கண்காணிக்கவேண்டும். பரவலான சோதனை, தொடர்பு தடம் அறிதல் பற்றிய தரவு இல்லாமல், அரசாங்கத்தால் எதையும் சாதிக்க முடியாது.

ஆதார அடிப்படையிலான முடிவுகளை எடுக்கவும் முடியாது. முறைசாரா தொழிலாளர்களைத் தவறாமல் சோதிப்பதற்கு, தொடர்புத் தடம் அறிவதற்கு, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்புடன் ஆதரவான நிலையில் தனிமைப்படுத்துவதற்கு நிலையான மற்றும் நாடு தழுவிய அர்ப்பணிப்புத் தேவை.’’

பிரபல மருத்துவத்துறை நிபுணரும், பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் தலைவருமான டாக்டர் கே.ஸ்ரீநாத் ரெட்டி எழுதியுள்ள கட்டுரையில், குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘‘கரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான கள உத்தியை சிறப்பாகச் செய்திட, ஊரடங்கு காலத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கண்காணிப்பு மற்றும் விரைவான பரிசோதனை, சீக்கிரமே தனிமைப்படுத்துதல், தொடர்புகளைக் கண்டறிவதில் தீவிரம், மருத்துவமனை உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குதல்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னார்வலர்களையும், தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்துதல் போன்ற காரியங்களைத் திட்டமிட்டு முதல் ஊரடங்குக் காலத்திற்குள்ளாகவே முடித்திருக்கவேண்டும்’’என்று அந்த டாக்டரின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரிய யோசனைகளை மத்திய - மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக் கூடாது; செயல்படுத்த முன்வரவேண்டும்,
‘‘கடவுளுக்குத்தான் தெரியும்‘’ என்று ‘கடவுளை’ இழுத்து நடுவில் விடுகிறார் முதல்வர்

இதைத்தானே தமிழக அரசிடம் எதிர்க்கட்சித் தலைவரும், மற்ற தலைவர்களும் சொன்னார்கள். அப்போது கேளாக்காதுடன், தன் முடிவே முடிந்த முடிவு என்று (War Strategy) போர் உத்திகளை மாற்றிக்கொள்ளாமல், ஒரே தடத்திலேயே சென்று, இன்று தொற்று பல மடங்காகியுள்ள பிறகு, நமது முதல்வர் ‘‘கடவுளுக்குத்தான் தெரியும்‘’ என்று ‘கடவுளை’ இழுத்து இப்போது நடுவில் விடுகிறார்!

‘‘கடவுளுக்குத்தான் தெரியும்’’ கரோனா எப்போது ஒழியும் என்று முதல்வர் கூறுவது விரக்தியின் வெளிப்பாடா? தோல்வியின் ஒப்புதலா? பக்தியின் உச்சகட்டமா? பிரச்சினையை திசை திருப்புவதா? பொறுப்பைத் தட்டிக் கழிப்பதா? தெரியவில்லை.

பெரியார் சொன்னபடியே, இப்போது கரோனா தடுப்பில், அறிவியல் அணுகுமுறையின்மீதே செயல்பாடுகள் உலகமெங்கும் நடைபெறுகின்றன. பெரியாரின் அறிவுரைதான் இந்தக் காலகட்டத்தில் டாக்டர்களை, விஞ்ஞானிகளை, கரோனா தடுப்பில் உழைக்கும் எண்ணற்ற தொண்டறப் பணியாளர்களை நடத்திச் செல்லுகிறது.

மக்கள் சுய கட்டுப்பாட்டை கடுமையாக- அலட்சியமில்லாமல் பின்பற்ற வேண்டும்!

மனிதர்களின் கடும் சுயக்கட்டுப்பாடான - தனிமைப்படுதல், முகக் கவசமணிதல், அடிக்கடி சோப்புப் போட்டு கைகழுவுதல், சரியான இடைவெளிவிடுதல், நோய் எதிர்ப்புச் சக்தியை உணவு, உடற்பயிற்சி மூலம் உருவாக்கிக் கொள்ளல், பரிசோதனைக்கு உட்படுத்துதல் ஆகியவை முக்கியமாகும். இவை தமக்கு தாமே மனிதர்கள் எளிதில் செய்துகொள்ள வேண்டிய பணிகள்''.

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x