Published : 24 Jun 2020 12:19 PM
Last Updated : 24 Jun 2020 12:19 PM
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியா முழுவதும் நிலவி வரும் கரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெறவிருந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின்படியான 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவு வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மார்ச் மாதத்தில் 12-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட, மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகள் அதிகமுள்ள மாநிலங்களிலும், மாநகரப் பகுதிகளிலும் கரோனா வைரஸ் நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்குள் நிலைமை சீரடையும் என்பதற்கான எந்த அறிகுறிகளும் தெரியாததாலும், தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படியான பொதுத்தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் தரப்பிலிருந்து எழுந்ததை அடுத்து இந்த முடிவை சிபிஎஸ்இ வாரியம் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அந்தக் காரணங்கள் அனைத்தும் ஜூலை 26-ம் தேதி நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும். ஜூலை மாதம் 15-ம் தேதி வரை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்? இடைப்பட்ட காலத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மாணவர்களின் அச்சமும், மன உளைச்சலும் விலக வாய்ப்பில்லை. ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வாகும்.
நீட் தேர்வு மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது சாத்தியமற்றது; வேண்டுமானால் நிலைமை சீரடையும் வரை இத்தகைய தேர்வுகளை ஒத்திவைத்து, கரோனா அச்சம் விலகிய பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில்தான் உச்சத்தை அடையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின், வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் நடப்புக் கல்வியாண்டு முடிவுக்கு வந்து விடும். அதன்பின், அடுத்த ஆண்டுக்கான தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற பணிகள் வந்துவிடும். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது.
அதுமட்டுமின்றி, நீட் தேர்வுகளையும், ஐஐடி தேர்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஐஐடி மாணவர் சேர்க்கை தேசிய அளவிலான தரவரிசையின் அடிப்படையில், மத்திய அரசால் மேற்கொள்ளப்படுவதாகும். பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைச் சமன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
ஆனால், அந்தச் சிக்கல்கள் எதுவும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இல்லை. அகில இந்திய ஒதுக்கீடு தவிர்த்த பிற இடங்களுக்கான, மருத்துவ மாணவர் சேர்க்கை மாநில அளவில்தான் நடைபெறும் என்பதால், 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அதை எளிதாக நடத்த முடியும். அதுதான் இன்றைய சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமையும்.
இதற்கெல்லாம் மேலாக, மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை; தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை. இந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின்படி மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்துவிடாது.
எனவே, நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment