Published : 24 Jun 2020 12:00 PM
Last Updated : 24 Jun 2020 12:00 PM
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை எடுக்கும்படி முறையீடு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீஸ் காவலில் இறந்தது தொடர்பாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக கண்டித்தனர். இதில்சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர்கள் இருவர், இரண்டு போலீஸார் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு (suo-moto case) செய்து 4 வாரங்களில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபிக்கு உத்தரவிட்டது.
மனித உரிமை ஆணைய டிஜிபி இதுகுறித்து நேரடியாக விசாரித்து 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்து (suo-moto case) டிஜிபி, மாவட்ட எஸ்.பி. ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை -மகன் மரணம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை (suo-moto case) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரியபிரகாசம் இந்த முறையீட்டைச் செய்தார். “மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாக காவலில் வைக்க உத்தரவிட்டதால் இருவரும் இறந்திருக்கிறார்கள் என்பதால் நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்றும் அவரது முறையீட்டில் கோரிக்கை வைத்துள்ளார்.
பதிவுத்துறைக்கு கடிதம் அளித்தால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT