Published : 24 Jun 2020 11:36 AM
Last Updated : 24 Jun 2020 11:36 AM

பொது முடக்கத்தால் காய்கனிகளின் விலை 60% வரை வீழ்ச்சி: கோவை வேளாண் மையம் தகவல்

கரோனா பொதுமுடக்கத்தால் பெரும்பாலான இடங்களில் காய்கனிகளின் மொத்த விலை 60 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது.
இருப்பினும் விநியோகச் சங்கிலி கட்டுப்படுத்துதல் மற்றும் சீர்குலைவு காரணமாக பெரும்பாலான காய்கனிகளின் சில்லறை விலை மாறாமல் உள்ளது. இந்தத் தகவலை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் மற்றும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெண்டை ஆகியவை பெரும்பாலும் மக்களின் நேரடி நுகர்வில் வரும் காய்கனிகள் ஆகும். வர்த்தக நிலவரங்களின்படி இந்த ஆண்டு காய்கனி வரத்து அதிகமாக உள்ளது. கரோனா காலத்தில் உணவு விடுதிகள், திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளின் தேவை குறைந்து காணப்படுகிறது. தற்போது கோவையின் மொத்த விலை சந்தையில் 60 சதவீதம் காய்கனிகள், (தக்காளி மற்றும் வெண்டை) கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து வருகின்றன. கேரளத்துக்குக் காய்கனிகள் கொண்டுசெல்ல அனுமதிக்கப்பட்டதால் தினமும் சுமார் 30 சதவீதம் காய்கனிகள் கோவையிலிருந்து கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் தெரிவிக்கின்றனர் வேளாண் மையத்தின் பேராசிரியர்கள்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
''தமிழ்நாட்டில் தக்காளியின் வரத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அதுவும் ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் ஆகிய காலங்களில் நிகழ்கிறது. தற்போது கோவை மொத்த விலை சந்தைக்குச் செம்மேடு, கிணத்துக்கடவு, ஆலந்துறை, நாச்சிபாளையம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. மானாவாரி அமைப்பில் ஆடிப்பட்டம் கத்தரிப் பயிரின் முக்கியமான பருவமாகும். இக்காலத்தில் தென்மேற்குப் பருவமழை, கத்தரி உற்பத்தியை நிர்ணயிக்கிறது. சேலம், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகியவை கத்தரிக்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும். வர்த்தக மூலங்களின்படி தற்போதைய வரத்து கோவை, தேனி மற்றும் கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்திலிருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் வெண்டைக்காய் பிப்ரவரி (தைப்பட்டம்) மற்றும் ஜூன் முதல் ஆகஸ்ட் (ஆடிப்பட்டம்) ஆகிய பருவங்களில் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், மகுடஞ்சாவடி வட்டாரங்கள், கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் வட்டாரங்கள், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மையம்பட்டி வட்டாரம் ஆகிய பகுதிகளிலும் வெண்டை பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின்படி வெண்டைக்காய் பெரும்பாலும் ஓசூர், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து கோவை சந்தைக்கு வருகிறது.

இஸ்ரேலில், விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின்கீழ் இயங்கிவரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்படி ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை விலை மற்றும் சந்தை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அறுவடையின்போது (ஆகஸ்ட்-செப்டம்பர்) தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.16 முதல் ரூ. 18 வரை; தரமான கத்தரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.23 வரை; தரமான வெண்டையின் பண்ணை விலை கிலோ ரூ.15 முதல் ரூ.17 வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. இவ்விலை தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்து மாறுபடும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனைகளின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு கோவை வேளாண் மையப் பேராசிரியர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x