Published : 24 Jun 2020 10:01 AM
Last Updated : 24 Jun 2020 10:01 AM
ஊரடங்கை மக்கள் சங்கடமான நிலையாக கருதாமல் கரோனாவை வெல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக கருத வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கை:
"கரோனாவின் தாக்கம் சென்னையிலும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டு போவதை கண்டு மக்கள் அச்சம் கொண்டு இருந்த வேலையில் தமிழக அரசு ஜுன் 19-ம் தேதியில் இருந்து ஜுன் 30- ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஊரடங்கு வெற்றிகரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்றை சூழ்நிலையில் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அங்கும் ஜுன் 24-ம் தேதியில் இருந்து ஜுன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கரோனா வைரஸ் பரவலை முழுமையாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதனை சங்கடமான நிலையாக கருதாமல் கரோனாவை வெல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக கருத வேண்டும். கரோனா தொற்று பரவாமல் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பொருளாதார இழப்பு, பசி, பட்டினி என்று எதை வேண்டுமானாலும் தாங்கிகொள்ளலாம். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக நாம் அதிகம் நேசித்தவர்கள், பழகியவர்கள், உற்றார் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது நலத் தலைவர்கள், தொண்டர்கள் போன்றோரின் இழப்பு என்பது தாங்கிகொள்ள முடியாத இழப்பாக மறக்க முடியாக நினைவுகளாக நெஞ்சில் மோதி நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸை எப்படி எதிர்க்கொள்வது, சமாளிப்பது என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது. உயிரை பழி வாங்கும் எண்ணற்ற நோய்களை தீர்க்கும் உயர்ந்த மருத்துவ தொழில்நுட்பம் உலகில் வந்த போதும் இந்த கரோனாவை ஒழிக்க இதுவரை ஒரு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்ற நிலை, நம்மை மேலும் அச்சுறுத்துகிறது, கவலைகொள்ள வைக்கிறது.
இதையெல்லாம் மீறி, நாம் உலகில் வாழ்ந்தாக வேண்டும் என்றால் இந்த கஷ்டங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு நாம் கரோனாவின் படியில் சிக்காமல், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் நாம் தவறாமல் முகக்கவசங்களையும் கையுறைகளையும் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக எந்த காரணத்தைக் கொண்டும் தேவையில்லாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வாழ்வில் எதை வேண்டுமென்றாலும் இழந்து பிறகு சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால் உயிரை இழந்தால் மீண்டும் பெற முடியாது.
ஆகவே, பொதுமக்கள் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். அரசு மற்றும் மருத்துவக்குழுவின் நெறிமுறைகளை கட்டுப்பாடுகளை வழிகாட்டுதலை முழுமையாக கடைப்பிடிப்போம். ஊரடங்கு முடிந்த பின் தமிழகத்தில் கரோனா தொற்று பரவவில்லை என்ற நிலையை உருவாக்குவோம். இதற்கு அனைத்து மக்களும் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவோம் என்று அன்போடு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT