Published : 23 Jun 2020 07:35 PM
Last Updated : 23 Jun 2020 07:35 PM

மதுரையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பால் வேகமாக நிரம்பும் அரசு மருத்துவமனை ‘கரோனா’ வார்டுகள்: பள்ளிகள், கல்லூரிகளில் தற்காலிக வார்டுகள் அமைக்க முடிவு 

மதுரை 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட ‘கரோனா’ வார்டுகளில் 80 சதவீதம் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுவிட்டதால் அடுத்தடுத்த நாட்களில் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களை கையகப்படுத்தி போர்கால அடிப்படையில் ‘கரோனா’ வார்டுகள் அமைப்பட உள்ளது.

மதுரையில் நேற்று நிலவரம் அடிப்படையில் மாவட்டத்தில் 849 பேர் ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 380 பேர் இதுவரை சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதில் மாநகராட்சிப்பகுதியில் 644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், தற்போது 321 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றவர்களில் இதுவரை 8 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மிக ஆபத்தாக கடைசி நேரத்தில் ‘கரோனா’ சிகிச்சைக்கு வந்தவர்களை கூட மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து குணமடையச் செய்துள்ளனர்.

மதுரையில் ‘கரோனா’ பாதித்தவர்களை கணக்கெடுத்தபோது வயதானவர்களை விட 60 வயதிற்கு கீழானவர்களைதான் இந்த தொற்று நோய் அதிகம் பாதித்துள்ளது. அதுபோல் குழந்தைகள் பெரியளவில் பாதிக்கப்படவில்லை. வீடுகளில் பாதுகாப்பாக இருந்ததாலே குழந்தைகள், முதியவர்கள் பெரியளவில் மதுரையில் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 50க்கு கீழ் பட்ட நோயாளிகளில் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் அறிகுறி இல்லாதவர்களுக்கு மதுரை அருகே உள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ வார்டுகளில் சிசிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மதுரையில் ‘கரோனா’ பாதிப்பு வேகமெடுத்துள்ளதால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘வார்டுகள் நிரம்பி வருகின்றன. இதுவரை 80 சதவீதம் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகவும், அடுத்தடுத்த நாட்களில் இதேபோல் பாதிப்புகள் அதிகரிக்கும்பட்சத்தில் அவர்கள் சிகிச்சைப்பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.

அதனால், மதுரை மாவட்டத்திற்கு சிறப்பு ‘கரோனா’ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சந்திரமோகன் நேற்று மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய்,, மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ சங்குமணி மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ப்ரியாராஜ் உள்பட அதிகாரிகளிடம் மாவட்டத்தில் ‘கரோனா’வை தடுப்பது, பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை அளிப்பது, பரிசோதனைகளை அதிகரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சைப்பெறுவதற்கு 1200 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் மட்டுமே 250 படுக்கை வசதிகள் உள்ளன.

அதனால், தற்போதைக்கு பிரச்சனையில்லை. ஆனால், நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்களில் ‘கரோனா’ வார்டுகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x