Published : 23 Jun 2020 06:46 PM
Last Updated : 23 Jun 2020 06:46 PM
சமீபத்தில் முதல்வர் தொடங்கி வைத்த தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளத்தில், கோவைப் பகுதிகளிலிருந்து மட்டுமே சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. கரோனா காலத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்திருப்பதே இதற்குக் காரணம்.
தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலை வாய்ப்புகளை தரும் நோக்கில், ‘தமிழ்நாடு தனியார் வேலை இணையம்’ (Tamilnadu Private Job Portal - www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தை ஜூன் 16-ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்து பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவி செய்யும் வகையில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலும், தனியார் துறை சார்ந்த அனைத்து குறு, சிறு, நடுத்தர மற்றும் பெருநிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இந்த இணையத்தில் பதிவேற்றம் செய்திடவும், தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இந்த இணையதளம் வழிவகை செய்கிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தனியார் வேலைவாய்ப்புகளுக்காக கோவையில் சுமார் 15 ஆயிரம் பேர் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள். இதுகுறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவியாளர் கார்த்திக் கூறும்போது, ’’கரோனா காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டதாலும், ஆட்குறைப்பு செய்யப்பட்டதாலும் பல இளைஞர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் உதவும். வேலை தேடுபவர்கள் இதில் தங்கள் சுயவிவரங்களைப் பதிவுசெய்து கொண்டால், பணி தேவைப்படும் தனியார் கம்பெனியிலிருந்து நேர்காணல் அழைப்பு வரும். தகுதியானவர்களுக்கு வேலை வழங்க நிறுவனங்கள் காத்திருக்கின்றன.
இந்த இணையளத்தை ஆரம்பித்து 8 நாட்களுக்குள் கோவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் வேலைக்காக பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 2,000-க்கும் அதிகமானோர் பதிவு செய்வதைப் பார்க்க முடிகிறது. வேலைவாய்ப்பு வழங்க பல முன்னணி நிறுவனங்களும் பதிவு செய்திருக்கின்றன. கொடீசியா (கோயமுத்தூர் சிறு தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு) மூலம் மட்டும் 30 நிறுவனங்கள் பதிவு செய்திருக்கின்றன. பிற மாவட்டங்களிலும் இதே பணி நடந்து வருகிறது’’ என்று கூறினார்.
இதற்கிடையே, கரோனா காரணமாகக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடத்தப்பட்டுவந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில், கோவை மாவட்ட இளைஞர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் கட்டணம் ஏதுமின்றி இந்த இணையதள சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோவை ஆட்சியர் கு.ராசாமணி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT