Published : 23 Jun 2020 06:24 PM
Last Updated : 23 Jun 2020 06:24 PM
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோவை கோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அரசுப் பேருந்துகள் குறைக்கப்பட்டதால், அன்றாடம் வேலைக்கு சென்று வருவோர் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பொதுப் போக்குவரத்தான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் பணிக்கு வெளியூர் செல்பவர்கள் பேருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோவை கோட்டத்தில் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நேற்று (ஜூன் 22) மாலை பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். மாலை 7 மணிக்குப் பிறகு போதிய அளவில் பேருந்துகள் இல்லாததால், பல்லடம் வழியாக திருப்பூர், கோவை, பொங்கலூர், காங்கேயம், வெள்ளகோவில், கரூர் என பல்வேறு பகுதிகளுக்கு வேலை முடித்து செல்பவர்களும், பொதுமக்கள் சிலர் குழந்தைகளுடன் பல மணிநேரம் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தியதுடன், பல்லடம் கிளையில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கி சமாதானப்படுத்தினர்.
அதேபோல், இன்று (ஜூன் 23) காலை கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல பலர் காத்திருந்தனர். ஆனால், போதிய பேருந்துகள் இயங்காததால் பலரும் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து, சூலூர் போலீஸார் பொதுமக்களை முறைப்படுத்தி அரசுப் பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, நாள்தோறும் பேருந்தை பயன்படுத்தும் பயணிகள் கூறும்போது, "கோவை கோட்டத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அரசுப் பேருந்துகள் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவாகவே கடந்த இரண்டு நாட்களாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் போதிய அளவில் இயங்கவில்லை. இதனால் வேலைக்கு சென்று வருபவர்களும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
மற்றொரு பக்கம் பலரும் குழந்தைகளுடன் பயணிக்கின்றனர். கரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்கிற அச்சமும் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது. ஆகவே, காலை , மாலை வேளைகளில் போதிய பேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்க வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT