Published : 23 Jun 2020 05:11 PM
Last Updated : 23 Jun 2020 05:11 PM
மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரபாண்டியன். பாஜக இணைஞர் அணி மாநிலச் செயலாளரான இவரது வீட்டிற்குச் சென்ற மதுரை கிழக்குத் தொகுதி திமுக எம்எல்ஏவான பி.மூர்த்தி, அவரைத் திட்டியபடி வீட்டுக்குள் நுழையும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அவர் தன்னை மிரட்டியதாகவும், தன்னை செருப்பால் அடிக்க முயன்றதாகவும் சங்கரபாண்டியன் தரப்பினர் புகார் கூறியுள்ளனர்.
இதுபற்றி சங்கரபாண்டியனிடம் கேட்டபோது, "திமுக எம்எல்ஏ மூர்த்தி, எப்போதுமே கொஞ்சம் தடாலடியான ஆள். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அவர் செய்த முறைகேடு, கண்மாய் தூர்வாரும் பணிகளில் செய்த முறைகேடு போன்றவற்றை ஆதாரத்தோடு நான் வெளியிட்டேன். அந்தக் கோபத்தில் நேற்று காலை 10 மணி அளவில் ஆட்களோடு வந்து என்னை வீடு புகுந்து மிரட்டினார். ஆபாசமாகத் திட்டினார். ’உன் புருஷனை ஒழுங்கா இருக்கச் சொல்லு’ என்று கூறி என் மனைவியையும் மிரட்டி செருப்பால் அடிக்க முயன்றார்" என்றார்.
இதுபற்றி மூர்த்தி எம்எல்ஏ தரப்பினரிடம் கேட்டபோது, "சங்கரபாண்டியன் விளம்பரப் பிரியர். கட்சியில் நல்ல பெயர் வாங்க வேண்டும், சீக்கிரம் வளர வேண்டும் என்பதற்காக எதையாவது செய்வார். கண்மாயைக் காணவில்லை. அது இது என்று ஏதாவது போஸ்டர் ஒட்டுவார். திமுக தலைவர் ஸ்டாலின், சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவுக்காக மதுரை வந்தபோது கருப்புக் கொடி காட்டியவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து திமுக எம்எல்ஏ பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பினார். ‘திருட்டு திமுக’ என்று சமூக வலைதளங்களில் எழுதினார். இதையெல்லாம் தட்டிக் கேட்கத்தான் எம்எல்ஏ அவரோட வீட்டுக்குப் போனார்.
அமைதியாகத்தான் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞரான சங்கரபாண்டியனின் மனைவி கோபத்தைத் தூண்டுவதுபோல் குரலை உயர்த்திப் பேசினார். ‘அப்படித்தான்யா பண்ணுவோம்’ என்று திமிராகப் பேசியது அவர்கள்தான். ஆனால், வேண்டுமென்றே அந்த வீடியோவை எடிட் செய்து, எம்எல்ஏ வீட்டிற்குள் நுழைகிற காட்சியை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்” என்றனர்.
திமுக எம்எல்ஏவை பிரதானப்படுத்தி இப்படியொரு சர்ச்சை ஓட்டிக்கொண்டிருந்தாலும், “இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லையே” என்கிறது மதுரை மாவட்ட போலீஸ்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT