Published : 23 Jun 2020 04:44 PM
Last Updated : 23 Jun 2020 04:44 PM
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 42 கடைகள் எரிந்து நாசமாகின. இங்குள்ள டீக்கடையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததுதான் இவ்விபத்துக்குக் காரணம் என்று முதல் தகவல் சொன்னாலும், இதன் பின்னணியில் கள்ள மார்க்கெட் எரிவாயு சப்ளையும் காரணமாக இருக்கலாம் எனும் பேச்சும் எழுந்திருக்கிறது.
ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் நகராட்சி மார்க்கெட் உள்ளது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த மார்க்கெட்டில் 1,460 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக மைதானத்திற்கும், பேருந்து நிலையத்திற்குமாக கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதால் இங்குள்ள வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில், இந்த மார்க்கெட்டில் சுழற்சி முறையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை கடைகளை நடத்தி வருகின்றனர் வியாபாரிகள்.
இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு கடையிலிருந்து வெடிச்சத்தத்துடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மளமளவென அக்கம்பக்கத்திலிருந்து கடைகளுக்கும் தீ பரவியிருக்கிறது. தகவல் கிடைத்து வந்த தீயணைப்புத் துறை வாகனங்களும், தனியார் தண்ணீர் வாகனங்களும் தீயை அணைக்கப் போராடின. இதற்கிடையே, மார்க்கெட்டில் உள்ள டீக்கடைகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடிக்க, தீ இன்னமும் வேகமாகப் பரவியது. அதைப் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்த மற்ற கடைக்காரர்கள் தங்கள் கடைகளுக்குள் நுழைந்து சிலிண்டர்களை வெளியே கொண்டுவந்துள்ளனர். இறுதியாக 42 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகியிருக்கின்றன. 5 மணி நேரம் கழித்தே தீயை அணைக்க முடிந்தது.
மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து தீ விபத்தைப் பார்வையிட்டுள்ளனர். தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள், “முதலில் தீப்பிடித்து எரிந்த கடையில் ஏதோ ஓர் இடத்தில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் அக்கடையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்துள்ளது” என்றே தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்தப் பகுதி மக்கள் சொல்லும் காரணம் முற்றிலும் வேறு. “இந்த மார்க்கெட் கடைகளில் சில சமையல் எரிவாயு ரிப்பேர் செய்யும் கடைகள் இயங்கி வருகின்றன. தவிர சில கடைகளில் எரிவாயு சிலிண்டரில் சில்லறையில் கேஸ் நிரப்பும் பணிகளையும் சிலர் கள்ளத்தனமாக செய்துவருகின்றனர். பெரிய சிலிண்டரிலிருந்து 5 கிலோவுக்கு அடக்கமான சிலிண்டருக்கு மாற்றி நிரப்பி எரிவாயுவை விற்றுவருகிறார்கள். இப்படி கள்ளத்தனமாக வாங்கப்பட்ட சிறிய சிலிண்டர்கள் மக்களிடம் கணிசமான அளவில் புழக்கத்தில் உள்ளன. எரிவாயு நிரப்பும் கடைக்காரர்களின் அஜாக்கிரதையால்கூட இந்த விபத்து நேர்ந்திருக்கலாம்” என்பதுதான் அவர்களின் கருத்து.
இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நேராமல் இருக்க, எரிவாயு சிலிண்டர் கள்ளச்சந்தை ஒழிக்கப்பட வேண்டும் எனும் குரல்களும் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அரசு கவனிக்குமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT