Published : 23 Jun 2020 01:22 PM
Last Updated : 23 Jun 2020 01:22 PM
கோவை உக்கடம் - செல்வபுரம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த சென்னை மீன் மார்க்கெட்டுகளில் இருப்பது போல் மரத்தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இதனால், கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று இங்குள்ள வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
கோவையின் நடுமையத்தில் இருக்கும் இந்த மீன் மார்க்கெட்டில் வார விடுமுறைகளிலும், பிற விடுமுறை நாட்களிலும் அதிகக் கூட்டம் இருக்கும். மீன் கடைகள் மட்டுமல்லாது, இறைச்சிக் கடைகள், கருவாட்டுக் கடைகள், லவ் பேர்ட்ஸ், முயல், வளர்ப்பு வெள்ளெலி உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகள் கடைகளும் இங்கே உள்ளதால் எப்போதுமே கூட்டம் இருக்கும்.
பொதுமுடக்கம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட போது இந்தப் பகுதி கூட்டமில்லாமல் காணப்பட்ட நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பழையபடி கூட்டம் வர ஆரம்பித்தது. பலரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்ததால் தொற்று அபாயம் ஏற்படலாம் எனும் அச்சம் எழுந்தது. இதைக் கட்டுப்படுத்த போலீஸாரும், மாநகராட்சி அலுவலர்களும் எடுத்த முயற்சிகளால் பலன் ஏற்படவில்லை.
“பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 5 பேருக்கு மேல் கூட்டமாகக் கூடக்கூடாது. கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்திட வேண்டும்” என்றெல்லாம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். பேருந்துகள், வணிக வளாகங்கள், சோதனைச் சாவடிகளில் நேரடி சோதனைகள் நடத்தி வருகிறார். இதேபோல் மாநகராட்சியின் கீழ் வரும் காய்கனி மார்க்கெட், மீன் மார்க்கெட், பழைய இரும்புக் கடைகள், ஓட்டல்கள் போன்றவற்றுக்கு நேரடி விசிட் செய்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகள் மீது கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இத்தனைக்குப் பிறகும், மீன் மார்க்கெட் பகுதியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில்தான் தற்போது புதிய தடுப்புகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்தப் பணிகள் இன்றுடன் முடிவடைந்திருக்கின்றன. நாளை முதல் இந்த தடுப்பு வழியேதான் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள். தடுப்புகள் வழியே சுமார் அரை கிலோமீட்டர் உள்ளே சென்றுதான் மீன் மார்க்கெட்டுக்குள் நுழைய முடியும்.
இதுகுறித்து மீன் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், “விடுமுறை தினங்களில் ஐயாயிரம் பேருக்கு மேல் இங்கு கூடுவார்கள். வாகனங்கள் மட்டும் வெளியே நூற்றுக்கணக்கில் நிற்கும். அப்படியான இடத்தில் தனிமனித இடைவெளியைப் பேணுவது மிகவும் கஷ்டம். யார் கரோனா தொற்றுடன் வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே சிரமப்பட்டோம். இப்போது இப்படியொரு தடுப்பு ஏற்படுத்துவதாலும், தடுப்பின் ஆரம்பத்திலேயே வாடிக்கையாளர்களுக்குக் காய்ச்சல் சோதனையிடுவதாலும் இந்தப் பிரச்சினை நிச்சயம் கட்டுக்குள் வரும் என்று நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT