Published : 23 Jun 2020 12:32 PM
Last Updated : 23 Jun 2020 12:32 PM
“முறையான யோகப் பயிற்சிகளை மேற்கொண்டால் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள்கூட கரோனாவிலிருந்து மீண்டுவிடலாம். இது கடந்த இரண்டு மாதங்களில் நாங்கள் அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மை” என நம்பிக்கை தருகிறார் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் தீபா.
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்கள் 100 பேர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு மன இறுக்கத்தைப் போக்கும் விதமாக யோகா உள்ளிட்ட பயிற்சிகளை அளிப்பதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை மருந்துகளையும் வழங்கி வருகிறார்கள். இவர்களின் இந்த சிகிச்சை முறைக்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது.
இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய டாக்டர் தீபா, “கரோனா பரவல் ஆரம்பித்த தொடக்கத்தில், பரவல் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்தான் நாங்கள் எங்களது சேவையைத் தொடங்கினோம். அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேரிலும் போன் வழியாகவும் கரோனாவை எதிர்கொள்வது குறித்து கவுன்சலிங் மற்றும் பயிற்சிகளை அளித்தோம். அத்துடன், அவர்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக இயற்கை மருத்துவ முறைப்படி இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள், துளசி, அதிமதுரம் கலந்த பானங்களை தயாரித்துப் பருகும் பயிற்சிகளையும் தந்தோம்.
அதன்பிறகு சென்னையில் கோவிட் 19 பாதிப்பு அதிகமானதும் நேரடியாக மருத்துவமனைகளுக்கே போய் கரோனா நோயாளிகளுக்கு கவுன்சலிங் மற்றும் யோகா பயிற்சிகளைக் கொடுக்க ஆரம்பித்தோம். அதன்படி, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் நாங்கள் கரோனா நோயாளிகளுக்கு உரிய பயிற்சிகளை அளித்தோம். இப்போது லயோலா கல்லூரி வளாகத்தில் சிகிச்சையில் இருக்கும் கரோனா நோயாளிகளை ஆற்றுப்படுத்துதல் செய்துவருகிறோம்.
மூச்சுத் திணறல்தான் கரோனா பாதிப்பின் உச்சம். மூச்சை முறையாகக் கையாண்டு எடுக்கப்படுவதுதான் யோகப் பயிற்சிகள். எனவே, ஒருசில யோகப் பயிற்சிகளை எடுப்பதன் மூலம் கரோனா நோயாளிகள் அதன் பிடியிலிருந்து மீண்டுவர முடியும். இதை நாங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கிறோம்.
‘அசிம்ப்டமேட்டிக்’ என்பது கரோனா தொற்றின் முதல்படி. இந்த நிலையில் தொற்று பாதித்தவருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. ஆனால், இவர் மற்றவர்களுக்குத் தொற்றைக் கடத்தும் நிலையில் இருப்பார். அடுத்ததாக ‘சிம்ப்டமேட்டிக் ’ தொற்றாளர்கள். இவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருக்கும். அடுத்த நிலைதான் கொஞ்சம் ஆபத்தானது. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு வென்டிலேட்டர் சப்போர்ட் தேவைப்படும்.
இதில் ‘அசிம்ப்டமேட்டிக்’ நிலையில் இருப்பவர்கள் தினமும் அரை மணி நேரம் யோகப் பயிற்சி எடுத்துக் கொள்வதுடன் இயற்கை மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொண்டால் கரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வந்து நாளடைவில் பூரண குணமடையலாம். அதேபோல், ‘சிம்ப்டமேட்டிக் ’ நிலையில் இருப்பவர்களுக்கு பிரத்யேகமான மூச்சுப் பயிற்சி மற்றும் தியானத்தை நாங்கள் சொல்லித் தருகிறோம். இவர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் இருக்கும் என்பதால் மூச்சுப் பயிற்சிகளை அதிகமாகக் கொடுக்கிறோம்.
மூன்றாம் நிலை பாதிப்பில் இருப்பவர்கள் அதிகமான மன அழுத்தத்திலும் ஒருவிதமான பயத்திலுமே இருப்பார்கள். சரியான தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். அவர்களை அந்தப் பயத்திலிருந்து மீட்டு அவர்களுக்குள் மன அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக யோகிக் ப்ரீத்திங், யோக நித்ரா என இரண்டு விதமான மூச்சுப் பயிற்சிகளை சொல்லித் தருகிறோம். வென்டிலேட்டரில் இருந்தாலும் இந்தப் பயிற்சியைச் செய்யமுடியும்.
இந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டால் நமக்கு ஏதும் நிகழாது என்ற நம்பிக்கை நோயாளிகளின் ஆழ்மனதில் பிறக்கும். இப்படி வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளிகளுக்கு இதுபோன்ற கவுன்சலிங் கொடுத்தபோது அவர்களது ‘ஆக்சிஜன் சாச்சுரேஷன் லெவல்’ 90 -லிருந்து 96 வரை உயர்ந்ததை நானே என் கண்ணால் பார்த்தேன். இப்படி சீரியஸான கட்டத்தில் இருந்த பலரும் நாங்கள் கொடுத்த கவுன்சலிங்காலும் மூச்சுப் பயிற்சிகளாலும் பூரண குணம்பெற்று வீடு திரும்பியிருக்கிறார்கள்.
அடுத்ததாக, ‘சிம்ப்டமேட்டிக்’ நிலையில் இருப்பவர்களுக்கு அலோபதி சிகிச்சையோடு சேர்த்து யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறைப்படி சிகிச்சையளித்து குணமாக்கும் முயற்சிலும் இருக்கிறோம். இதன் மூலம் குணமான நிறையப் பேர் எங்களுக்கு நேர்மறையான பின்னூட்டங்களை அனுப்பி வருகிறார்கள். நாங்கள் கொடுத்த பயிற்சிகளால் குணமானவர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்றவர்களுக்கும் இந்த பயிற்சி முறைகளைச் சொல்லிக் கொடுத்து அவர்களையும் குணப்படுத்தி வருகிறார்கள்.
கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மட்டுமல்ல... உலகத்தில் மக்கள் அனைவருமே நமக்கு கரோனா தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பலரும் பலவிதமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இதிலிருந்து வெளியில் வருவதற்கு ஒரேவழி யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதுதான். கரோனா பாதித்தவர்கள் மட்டுமல்லாது பாதிப்புக்கு உள்ளாகாதவர்களும் இந்த யோகப் பயிற்சிகளை செய்வதன் மூலம் கோவிட் 19-க்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.
அதாவது, யோக பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு கரோனா வராது. அப்படியே வந்தாலும் அவர்கள் அதிகம் பாதிப்பு இல்லாமல் அதன் தாக்கத்திலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார்கள். அந்தளவுக்கு அந்தப் பயிற்சிகள் நமக்குள்ளே நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும்.
ஆக, யோகா பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் கரோனா தொற்றுப் பரவாமல் தற்காத்துக் கொள்ள முடியும். கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் சீக்கிரமே அதிலிருந்து மீண்டு வரவும் முடியும்” என்றார் மருத்துவர் தீபா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT