Published : 23 Jun 2020 11:40 AM
Last Updated : 23 Jun 2020 11:40 AM
கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் இதுவரை மொத்த கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 280 ஆக உள்ளது. சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 164 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 114 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஜூன் 2-ம் தேதி வரை 147 என்ற எண்ணிக்கையில் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கரோனா வைரஸ் தொற்று, அதன்பின்னர் அதிகரிக்கத் தொடங்கியது. வெளியூர்களில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், கோவையிலும் தொற்று எண்ணிக்கை மளமளவென உயரத் தொடங்கியது.
அதிகபட்சமாக கடந்த 19-ம் தேதி 29 பேருக்குத் தொற்று ஏற்பட்டது. 20-ம் தேதி 11 பேருக்கும், 21-ம் தேதி 12 பேருக்கும், நேற்று (ஜூன் 22) 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் படிப்படியாக அதிகரிக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் நூற்றுக்கானோர் கூட்டம், கூட்டமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் உள்ள பேக்கரிகள், நடமாடும் 'சூப்' கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், ரேஸ்கோர்ஸ் நடைபாதை கடந்த 9-ம் தேதி 'சீல்' வைக்கப்பட்டு, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் நடைப்பயிற்சி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பூ மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த 144 பூக்கடைகளை மூடி, அப்பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
உக்கடம் லாரி பேட்டை பகுதியில் இயங்கி வரும் மொத்த மீன் மார்க்கெட்டில் தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. தனிமனித விலகல் கடைபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில், இந்த மார்க்கெட்டில் வியாபாரிகள் மட்டும் வந்து மீன் வாங்கிச் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஏதுவாக இரவு 1 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
100 அடி சாலையில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்னையில் இருந்து கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்களை அழைத்து வந்து, அவர்கள் மூலமாக மேலும் சிலருக்குத் தொற்றுப் பரவியதால், அந்த கடை சீல் வைத்து மூடப்பட்டது. கிராஸ்கட் சாலையில் உள்ள 3 மற்றும் 4 வீதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டும் நேற்று மாலை சீல் வைக்கப்பட்டது.
ஊடரங்கு தளர்வுக்குப் பிறகு பொதுமக்களின் நடமாட்டம் பொதுவெளியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் அதிகம் கூடும் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் போன்றவையும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, “கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் தற்போது 10,856 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து யாரேனும் கோவைக்கு வந்திருப்பது தெரியவந்தால் '1077' என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு வந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்து இருந்தால் 0422-2301114, 9499933870 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
பொதுமக்கள் கைகளைக் கழுவுதல், சமூக விலகலைப் பின்பற்றுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வெளியில் வரும் போது கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருதல் ஆகியவற்றைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT