Published : 23 Jun 2020 09:56 AM
Last Updated : 23 Jun 2020 09:56 AM
மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து ரயிலில் தப்பிவந்த 12 இளைஞர்களை விழுப்புரம் வருவாய்துறையினர் மீட்டு தனிமைப்படுத்தும் முகாமில் தங்கவைத்தனர்.
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த ஒடிசா மாநில தொழிலாளர்கள் மதுரையில் உள்ள ஒரு தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள், தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கக்கோரி ஆன்லைனின் விண்ணப்பித்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் தனிமைப்படுத்தும் முகாமிலேயே தங்கியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களில் 12 பேர், தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து நேற்று (ஜூன் 22) திடீரென மாயமாகினர். உடனே இதுபற்றி அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அனைத்து மாவட்டநிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மதுரையில் இருந்து விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 12.30 மணியளவில் வந்த ரயிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் இறங்கினர். இவர்கள் அனைவரும் இ-பாஸ் அனுமதி பெற்றுத்தான் ரயிலில் பயணம் செய்தனரா? என்று விழுப்புரம் ரயில் நிலைய நுழைவுவாயிலில் ரயில்வே போலீஸாரும், வருவாய்த்துறையினரும் சோதனை செய்தனர். மேலும், அவர்கள் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது, 12 பேரிடம் ரயில் பயணச்சீட்டு மட்டும் இருந்தது, இ-பாஸ் இல்லை. உடனே அவர்களிடம் வருவாய்த்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து ஆட்சியர் அண்ணாதுரைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய்துறையினர் 12 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரையில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து தப்பி ரயில் மூலம் விழுப்புரம் வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் 12 பேரையும் வருவாய்துறையினர் மீட்டு விழுப்புரம் கப்பியாம்புலியூரில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைத்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசிடம் பேசி, இவர்கள் 12 பேரையும் முறையாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று வருவாய்துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT