Published : 11 Sep 2015 08:46 AM
Last Updated : 11 Sep 2015 08:46 AM
காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கரும்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2014-15ம் ஆண்டு சீசனில் விவசாயிகள் வழங்கிய ரூ.23 கோடி மதிப்பிலான கரும்புக்கு, ரூ.12 கோடி பணத்தை 4 கட்டமாக ஆலை நிர்வாகம் வழங்கியது. ரூ.11 கோடி நிலுவை தொகையை 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், நிலுவைத் தொகையை இதுவரை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிறப்புப் பட்ட கரும்புகளுக்கான அறுவடை சீசன் தற்போது தொடங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கிய கரும்புகளுக்கே ஆலை நிர்வாகம் பணத்தை பாக்கி வைத்திருக்கும் நிலையில், தற்போது சிறப்புப் பட்டத்தில் விளைந்துள்ள கரும்புகளை, தனியார் ஆலைக்கு வழங்க விருப்பமில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தனியார் ஆலை நிர்வாகமும், நஷ்டம் ஏற்பட்டுள்ளதை காரணமாக கூறி அறுவடைக்கான பணிகளை தொடங்காமல் உள்ளது. இதனால், கரும்புகள் காய்ந்து நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தனபால் கூறியதாவது: தனியார் ஆலை நிர்வாகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி ஏற்கெனவே வழங்கப்பட்ட கரும்புகளுக்கே இன்னும் பணமளிக்காமல் உள்ளன. சிறப்புப் பட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள 20 ஆயிரம் டன் கரும்புகளை தனியார் ஆலைக்கு வழங்க விவசாயிகளுக்கும் விருப்பம் இல்லை. அறுவடை செய்ய வேண்டிய தனியார் ஆலை நிர்வாகமும் இதில் ஆர்வம் காட்டவில்லை.
கரும்புகளை 12-வது மாதத்தில் அறுவடை செய்தால் மட்டுமே, சிறந்த மகசூல் கிடைக்கும். இதில், தாமதம் ஏற்பட்டால் கரும்புகளின் நுனிப் பகுதியில் உள்ள பால் கரும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக காய்ந்து எடை குறையும். இதனால், விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, பழையசீவரம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கூறியதாவது: கரும்பு அரவையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சிறப்புப் பட்டத்தில் விளைந்துள்ள கரும் புகளை, கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வழங்க அனுமதி யளிக்குமாறு சர்க்கரைத்துறை ஆணையத்துக்கு மனு செய்யப் பட்டுள்ளது. அக்டோபர் மாதம் சீசன் தொடங்க உள்ளதால், கரும்பு அரவைக்கு முதலில் திறக்கப்படும் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புகளை வழங்க அனுமதியளிக்குமாறு சர்க்கரை ஆணையத்தை கேட்டுக் கொண்டு ள்ளோம் என்று ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT