Published : 22 Jun 2020 10:13 PM
Last Updated : 22 Jun 2020 10:13 PM

ரூ.1000 நிவாரணத் தொகையை வீடுதோறும் வழங்காமல் கூட்டம் சேர்த்து வழங்குவதா? உதவித்தொகை தருகிறேன் என்று கரோனாவைப் பரப்புவதா?- தினகரன் கண்டனம்

சென்னை

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் ரூ.1000 நிவாரணத் தொகையை வீடு வீடாக வழங்க உத்தரவிருந்தும் தெருமுனைகளில் கூட்டம் சேர்த்து வழங்கி வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பட்டும் திருந்தவில்லையா? என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வீடுதோறும் நிவாரணத் தொகையை ரேஷன் ஊழியர்கள் வழங்குவார்கள் என அரசு அறிவித்தது.

கடந்த முறை அறிவித்தபோது அரசு உத்தரவை மதிக்காத ஊழியர்கள் தெருமுனையில் அமர்ந்து அனைவரையும் வரவழைத்து கும்பல் சேர்த்து பணம் வழங்கினார்கள். சென்னையில் கரோனா தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் இன்றும் அரசு உத்தரவை மதிக்காமல் தெருவில் கும்பலாக நிற்க வைத்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்:

அவரது ட்விட்டர் பதிவு:

“சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாயை அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்காமல், அங்கங்கே கூட்டம் சேர்த்து, மக்களை வரிசையில் நிற்கவைத்து அளித்து வருவதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவ்வளவுக்குப் பிறகும் பாடம் கற்காமல் பழனிசாமி அரசு இப்படி அலட்சியமாக நடந்துகொள்வது கவலை தருகிறது. 'உதவித்தொகை தருகிறேன்' என்கிற பெயரில் கரோனாவை இன்னும் வேகமாக பரப்புவதை நிறுத்திவிட்டு, வீடுகளுக்கே சென்று நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு தினகரன் பதிவிட்டுள்ளர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x