Published : 22 Jun 2020 08:19 PM
Last Updated : 22 Jun 2020 08:19 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாதம் ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகத்தில் மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக இப்பிரச்சினை நீடிப்பதாகத் தெரிகிறது.
இதனால் பரிசோதனைக்கான மாதிரிகள் தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையத்தில் பணியாற்றிய மருத்துவர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கடந்த 2 நாட்களுக்குமுன் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் போதிய ஆய்வகப் பணியாளர்கள் இங்கு பணியில் இல்லை என்று தெரிகிறது. இதனால் பரிசோதனை முடிவுகள் அறிவிப்பதில் கடந்த 2 நாட்களாகவே தாமதம் ஏற்பட்டு வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டானிலும், கன்னியாகுமரி- திருநெல்வேலி மாவட்ட எல்லையான காவல்கிணறு பகுதியிலும் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதிக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெப்பநிலை பரிசோதனையில் கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோல் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இறுந்து தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்கள், ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்தும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
அந்தவகையில் நாளொன்றுக்கு 600-க்கும் மேற்பட்ட மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா பரிசோதனை மையத்தில் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது.
வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை முடிவுகள் வரும்வரையில் பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட நிர்வாக கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் கரோனா பரிசோதனை மையத்தில் மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஆகிவருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்தும் மாதிரிகளை தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ஆசாரிப்பள்ளத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதனால் முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கும் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT