Published : 22 Jun 2020 06:38 PM
Last Updated : 22 Jun 2020 06:38 PM

வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி ரயில் சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே வாரியம் கைவிட வேண்டும்; ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தின் முக்கிய வழித்தடங்களில் ரயில் சேவையை நிறுத்தக்கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 22) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாத வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் சேவைகளை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும்படி ரயில்வே துறைக்கு இந்திய ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தமிழ்நாட்டின் ரயில் வரைபடத்தையே சிதைக்கும் தன்மை கொண்டதாகும்; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ரயில்வே துறை செலவுகளைக் குறைப்பதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை ரயில்வே துறை பொது மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே வாரியத்தின் நிதி ஆணையர் மஞ்சுளா ரங்கராஜன் அனுப்பியுள்ளார். அதில் முக்கியமாக இடம்பெற்றுள்ள பரிந்துரை என்னவென்றால், 'எந்தெந்த கிளை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் வருவாய் ஈட்டவில்லையோ, அந்த ரயில்கள் அனைத்தின் சேவைகளையும் எந்த அளவுக்கு நிறுத்த முடியுமோ, அந்த அளவுக்கு நிறுத்த வேண்டும்' என்பதுதான். அதாவது வருமானம் இல்லாத வழித்தடங்கள் அனைத்தையும் மூடிவிட்டு, அதிக லாபம் ஈட்டும் வழித்தடங்களில் மட்டும் ரயில்களை இயக்கலாம் என்பது தான் இதன் பொருளாகும்.

அதன்படி பார்த்தால், தமிழ்நாட்டில் சென்னை - மதுரை, சென்னை - நெல்லை, சென்னை - தூத்துக்குடி, சென்னை -நாகர்கோவில், சென்னை - பெங்களூரு உள்ளிட்ட சில வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் மட்டும்தான் லாபத்தில் இயங்குகின்றன. மற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களின் வருமானம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது. அதைக் காரணம் காட்டி, அந்த ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை ஏராளமான கிளை வழித்தடங்களில் ரயில் சேவைகளை நிறுத்த வேண்டிய நிலை உருவாகும்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து மயிலாடுதுறை, மன்னார்குடி, மானாமதுரை, ராமேஸ்வரம், சிதம்பரம், கடலூர், கும்பகோணம், போடி நாயக்கனூர், உசிலம்பட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. வருமானம் கிடைக்காததைக் காரணம் காட்டி இந்த சேவைகள் நிறுத்தப்பட்டால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

ஒரு நாட்டில் அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையை லாபகரமாக இயக்கிவிட முடியாது. அது அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட சாத்தியமல்ல. ரயில் போக்குவரத்தை மக்களுக்கு வழங்கப்படும் சேவையாகப் பார்க்க வேண்டுமே தவிர, வருமானம் ஈட்டும் வழியாகப் பார்க்கக்கூடாது. கிளை வழித்தடங்களில் ரயில் சேவையை நிறுத்திவிட்டு, முதன்மை வழித்தடங்களில் மட்டுமே ரயில்களை இயக்குவது சாத்தியமில்லை.

முதன்மை வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் பயணிப்பவர்கள் அனைவருமே அந்த வழித்தடங்களில் மட்டும் வாழும் மக்கள் அல்ல. உதாரணமாக, தமிழகத்தை எடுத்துக் கொண்டால், சென்னையிலிருந்து பயணத்தைத் தொடங்குபவர்கள் அனைவருமே சென்னையிலிருந்து 50 கி.மீ. சுற்றுப்பகுதியில் வசிப்பவர்கள் ஆவர். அவர்கள் சென்னைக்கு வந்து பயணத்தைத் தொடங்க வேண்டும்; பயணத்தை முடித்துக் கொண்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் கிளை வழித்தடங்களில் ரயில்களை இயக்கியாக வேண்டும்.

அவ்வாறு இயக்காவிட்டால், கிளை வழித்தடங்களில் வாழ்பவர்கள் மாற்றுப் போக்குவரத்த்தை தேடிக் கொள்வர். அத்தகைய நிலைமை ஏற்படும் போது முதன்மை வழித்தடங்களில் பயணிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

கிளை வழித்தடங்களில் ரயில் சேவையை ரத்து செய்யும் ரயில்வே வாரியத்தின் பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், அதன்பின் வட மாவட்டங்களின் வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட திண்டிவனம் - நகரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வழியாக கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆகியவையும் கைவிடப்படக் கூடும். அது வட மாவட்டங்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, வருவாய் இல்லாததைக் காரணம் காட்டி ரயில் சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே வாரியம் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக ரயில் கட்டமைப்புகளை அதிகரித்து, அதிக அளவில் ரயில்களை இயக்கி, அதை முதன்மைப் போக்குவரத்து முறையாக மாற்றவும், அதன் மூலம் வருவாயை அதிகரிக்கச் செய்யவும் ரயில்வே துறை முன்வர வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x