Published : 22 Jun 2020 05:34 PM
Last Updated : 22 Jun 2020 05:34 PM
அத்தியாவசியப் பணியான மின் வாரியப்பணியில் ஈடுபடும் ஊழியர் அடையாள அட்டை காட்டியும் அவரை இ-பாஸ் கேட்டுத் தாக்கி, தரையில் தள்ளி மிரட்டிய திருவள்ளூர் போலீஸார் செயலுக்கு விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தினர் சோதனைச் சாவடி அமைத்து, ஆவடி நோக்கி சென்னைக்கு வருபவர்களைச் சோதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஜூன் 21 (நேற்று) காலை திருவள்ளூரில் இருந்து ஆவடி நோக்கி மின்வாரிய ஊழியர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரிடம் இ-பாஸ் உள்ளதா? என போலீஸார் கேட்டபோது, அத்தியாவசியப் பணியான மின்வாரியத்தில் இருப்பதாகக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார்.
அதனை ஏற்க மறுத்த போலீஸாரிடம், தன்னை வேலைக்குச் செல்ல அனுமதிக்கும்படி கெஞ்சியதால், ஆத்திரமடைந்த காவலர் ஒருவர் மின்வாரிய ஊழியரை மனிதாபிமானமின்றி சரமாரியாக அடித்து, உதைத்துக் கீழே தள்ளினார். ஒரு கட்டத்தில் மின்வாரிய ஊழியர் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டும், அவரை அடித்து உதைத்து அங்கிருந்து அனுப்பினர்.
இதை தனது செல்போனில் பதிவு செய்த ஒரு நபர் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்நிலையில் அதுகுறித்த செய்தியும் ஊடகங்களில் வெளியானது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மாநில மனித உரிமை ஆணையப் பொறுப்புத் தலைவரான துரை. ஜெயச்சந்திரன், திருவள்ளூர் மாவட்டக் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ''அத்தியாவசியப் பணியான மின்வாரியப் பணியாளர் அடையாள அட்டை காண்பித்தும் அவரிடம் காவல் துறையினர் எப்படி இ- பாஸ் கேட்கலாம்?
காவல் பணியில் இதுபோன்று தாக்குவது, தரையில் தள்ளி வீழ்த்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?
சம்பந்தப்பட்ட தவறு செய்த காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இ-பாஸ் விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கும்படி தமிழக டிஜிபிக்கும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...