Published : 22 Jun 2020 05:20 PM
Last Updated : 22 Jun 2020 05:20 PM
தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் திருமணம் செய்துகொள்வோர் அரசின் திருமண உதவித்கொகை பெற விண்ணப்பித்தால் அலுவலர்கள் ஏற்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்துக்கு மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித் திட்டத்தின் மூலம் அரசு ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும், 4 கிராம் வீதம் தங்கமும் வழங்கி வருகிறது.
இதற்கு திருமண பத்திரிகை, கல்விச் சான்று உள்ளிட்ட ஆவணங்களோடு திருமணத்துக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் திருமண விழாக்களானது ஆரவாரம் இல்லாமல் அரசின் உத்தரவைப் பின்பற்றி எளிமையாக நடைபெற்று வருகிறது.
திருமணம் நடத்துவதே மிகவும் கடினமான சூழலாக இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாகவே உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது இயலாத செயலாக உள்ளது.
எனவே, திருமணத்துக்குப் பிறகு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை ஏற்க அலுவலர்கள் மறுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் த.செங்கோடன் கூறும்போது, "தமிழகம் முழுவதும் கரோனா பிரச்சினையினால் 50 பேருக்குள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்பதால் பத்திரிகை அடிக்காமல், செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்து திருமணம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள் முறையாக இயங்காததாலும், போக்குவரத்துப் பிரச்சினையினாலும் திருமணத்துக்கு முன்னதாக திருமண உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் முடிந்து விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் நிராகரிக்கின்றனர். இதே நிலை தமிழகம் முழுவதும் உள்ளது.
எனவே, பத்திரிகை இல்லாமலும், திருமணத்துக்குப் பிறகு விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களையும் அரசு ஏற்க வேண்டும். அதற்கு ஏற்ப தமிழக அரசு விதியைத் தளர்த்த வேண்டும்.
இல்லையேல், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும். இது குறித்து தமிழக அரசுக்கும் புதுக்கோட்டை ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT