Last Updated : 22 Jun, 2020 05:03 PM

 

Published : 22 Jun 2020 05:03 PM
Last Updated : 22 Jun 2020 05:03 PM

தஞ்சாவூர் அருகே கரோனா அச்சத்தால் 15 நாட்களுக்குக் கடைகளை மூடிய கிராம மக்கள்; டாஸ்மாக் கடையை மூடக் கோரிக்கை

கடைகளை 15 தினங்களுக்கு தாங்களாகவே மூடிய வணிகர்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே கரோனா அச்சத்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருதியும் வணிகர்கள் தாங்களாகவே 15 தினங்களுக்குக் கடைகளை மூடியுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே மருங்குளம் நான்கு ரோடு சந்திப்பில் மளிகை, இறைச்சி, பெட்டிக்கடை, உணவகங்கள், டீக்கடைகள், உரக்கடைகள், இ-சேவை மையங்கள் என சுமார் 100 கடைகள் உள்ளன. மருங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடக்குப்பட்டி, புதுப்பட்டி, வேங்கராயன்குடிக்காடு, கொல்லாங்கரை, வல்லுண்டாம்பட்டு, சூரியம்பட்டி, அதினாம்பட்டு, ஏழுப்பட்டி, அருமலை, சாமிப்பட்டி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு மையமாக உள்ளதால் தினமும் ஏராளமானோர் மருங்குளத்துக்கு வந்து கடைவீதிகளில் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மருங்குளத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் ஒட்டுமொத்தமாக அனைத்துக் கடைகளையும் மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நேற்று (ஜூன் 21) முதல் ஈடுபட்டுள்ளனர்.

வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் நுழைவு வாயிலில் வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருங்குளம் நான்கு ரோட்டுக்கு அருகில் உள்ள கிராம மக்கள் யாரும் பொருட்கள் வாங்க வர வேண்டாம் எனவும் ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளனர்.

பெட்ரோல் பங்க், மருந்து கடை, டாஸ்மாக் கடை மட்டுமே தற்போது இயங்கி வருகிறது, டாஸ்மாக் கடைக்கு வரும் மது அருந்துவோரால் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாகக் கருதி டாஸ்மாக் கடையையும் 15 தினங்களுக்கு மூட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு மருங்குளம் கிராம வர்த்தகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மருங்குளத்தைச் சேர்ந்த வணிகர் ரமேஷ் கூறும்போது, "கரோனா ஊரடங்கால் ஏற்கெனவே இரு மாதங்களாக கடைகளை மூடியிருந்தோம். இதனால் எங்களுக்குப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அருகில் உள்ள கிராமத்தில் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அந்த கிராமத்தினர் இங்கு வந்து செல்வதால் எல்லோருக்கும் பரவும் என்பதால் நாங்கள் முன்னெச்சரிக்கையாகவும், பொதுமக்களின் பாதுகாப்பினைக் கருதியும் அனைத்துக் கடைகளையும் தாங்களாகவே முன்வந்து 15 தினங்களுக்கு மூடியுள்ளோம்.

அதே நேரத்தில் அரசும் எங்களது கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை 15 தினங்களுக்கு மூடினால் இந்தப் பகுதியில் கரோனோ தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வல்லுண்டாம்பட்டு கிராம நுழைவுவாயில் வேலி அமைத்துத் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x