Published : 22 Jun 2020 04:30 PM
Last Updated : 22 Jun 2020 04:30 PM
விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று கூறி விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 50-க்கும் அதிகமானோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (ஜூன் 22) வந்தனர். அவர்களை போலீஸார் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, தாங்கள் கொண்டு வந்திருந்த 5 மூட்டை வெண்டைக்காய், 5 கிலோ எலுமிச்சை பழம், 2 கிலோ கத்தரிக்காய் ஆகியவற்றை ஆட்சியர் அலுவலக வளாக பிரதான நுழைவுவாயில் முன் சாலையில் கொட்டி, உரிய விலைக் கிடைக்கவில்லை என்று கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பலர் சட்டை அணியாத நிலையில், அய்யாக்கண்ணு கோவணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறும்போது, "விவசாய விளைப்பொருட்களுக்கு ஏற்கெனவே உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராடி வரும் நிலையில், கரோனா ஊரடங்கால் விலை கடுமையாக சரிந்துவிட்டது. வெண்டைக்காய் கிலோ ரூ.2-க்கும், வாழைத்தார் ரூ.40-க்கும், எலுமிச்சை ஒரு பழம் 50 பைசாவுக்கும் கொள்முதல் செய்கின்றனர். இதேபோல், பல்வேறு காய்-கனிகள் விலை மிக குறைவாக கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், தண்ணீர் பாட்டில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு லிட்டர் பாலை ரூ.15-க்கு கொள்முதல் செய்கின்றனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.37, டன் கரும்புக்கு ரூ.5,000 அளிக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் அளிக்க வேண்டும். வேளாண் இயந்திரங்களை இயக்கும் வகையில் விவசாயிகளுக்கு பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகளிடன் அரசே பாலைக் கொள்முதல் செய்ய வேண்டும்.
விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் வாழ்க்கையை நடத்தவே மிகுந்த சிரமப்படுகிறோம். எனவே, எங்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், 'வறுமையில் சாவதைவிட கரோனாவால் சாவதே மேல்' என்று அடுத்த வாரம் சென்னைக்கு நடைப்பயணம் செல்வோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT