Last Updated : 22 Jun, 2020 04:12 PM

 

Published : 22 Jun 2020 04:12 PM
Last Updated : 22 Jun 2020 04:12 PM

அங்கீகரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்களின் கரோனா மருந்துகளை பரிசோதிக்க மறுப்பது ஏன்?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

அங்கீகரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கண்டுபிடிக்கும் கரோனா தடுப்பு மருந்துகளை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதித்து பார்க்க மறுப்பது ஏன்? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா வைரஸை கட்டுப்படுத்த 66 மூலிகைகள் அடங்கிய இம்ப்ரோ என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். இந்த பவுடரை தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரு வேளை சாப்பிடுவதற்கு முன்பு குடித்து வந்தால் கரோனா நோயிலிருந்து விடுபடலாம்.

அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் இம்ப்ரோ மருந்துக்கு உள்ளது.

சீனாவில் கரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவமே உதவியது. அதன்படி இம்ப்ரோ மருந்தை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அளித்தேன். இதுவரை நடவடிக்க எடுக்கவில்லை. கரோனா நோயை குணப்படுத்தும் சித்த மருந்தான இம்ப்ரோவை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தினமும் கரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் கரோனாவுக்காக மருந்து தேடி அலையும் சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவரான மனுதாரர் கண்டுபிடித்துள்ள சித்த மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பது ஏன்?

மனுதாரர் இம்ப்ரோ சித்த மருந்து தொடர்பாக ஏப்ரல் மாதத்திலேயே மனு அனுப்பியுள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? அங்கீகரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்களால் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்துகளை பரிசோதிப்பதில் என்ன தயக்கம்?

ஆங்கில மருத்துவ லாபியால் இயற்கை மருத்துவ முறை அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என வேதனை வெளிப்படுத்தினர்.
பின்னர், அங்கீகரிக்கப்பட்ட சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கரோனாவுக்கு கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x