Last Updated : 22 Jun, 2020 04:01 PM

 

Published : 22 Jun 2020 04:01 PM
Last Updated : 22 Jun 2020 04:01 PM

கிருஷ்ணகிரி மாவட்ட நீண்ட கால கோரிக்கை நிறைவேறுகிறது; ரூ.80 கோடி மதிப்பில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சின்னாறு பகுதிக்கு இடமாற்றம் - எம்.பி. தகவல்

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. செல்லக்குமார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடி விரைவில் சுமார் 80 கோடி மதிப்பில் சின்னாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஜூன் 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மக்களவை தேர்தலின் போது, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுங்கச்சாவடியால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி. அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணம் கட்டிவிட்டு செல்ல வேண்டி உள்ளது. சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய நாடளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினேன்.

மாற்றுச் சாலை

தரைவழிப்போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து, சுங்கச்சாவடியால் கிருஷ்ணகிரி நகர பொதுமக்கள் எவ்வாறெல்லாம் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்பதையும், விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், 'இவை நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய முடியாது. வேண்டுமென்றால் ஆட்சியர் அலுவலகம் செல்ல தனியாக சாலை அமைத்துத் தருகிறோம்' என்றனர். ஆனால், ஒரு மணி நேர விவாதத்திற்கு பிறகு அமைச்சர் இதை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டார்.

அப்போதும் துறை அதிகாரிகள், இதனால் சுங்கச்சாவடி நடத்துகிறவர்களுக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என மறுத்தார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறியதால், மாற்றுகிறோம் என்று ஒப்புக் கொண்டனர். உடனே மாவட்ட ஆட்சியரிடம் அங்கிருந்து தகவல் தெரிவித்து, மாற்று இடம் பார்த்துத்தர கோரிக்கை விடுத்தேன். அவரும் சின்னாறு பகுதியில் இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தார். அந்த இடத்தை அதிகாரிகள் அனைவரும் நேரில் சென்று பார்த்தனர். அப்போது, சின்னாறு பகுதி மக்கள், ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை அமைக்க எங்களின் இடத்தை அரசு எடுத்துக் கொண்ட வகையில் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், சுங்கச்சாவடி அமைக்க எங்களின் இடத்தை எடுக்கக் கூடாது என்றனர்.

புதிய சுங்கச்சாவடியில் 24 பாதைகள் அமைக்க முடிவெடுத்திருந்தனர். அப்படி அமைத்தால் பொதுமக்களின் நிலங்களை கையகப்படுத்த வேண்டி வரும். அதனால், 18 பாதைகள் வரும்படி புதிய சுங்கச்சாவடியை அமையுங்கள் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்படி அமைத்தால் யாருடைய நிலங்களையும் கையகப்படுத்த தேவையில்லை என்றேன். ரிலையன்ஸ் நிறுவனத்தினரும் ஒத்துக் கொண்டனர்.

அதன்படி, சின்னாறு பகுதியில் 18 பாதைகள், சுமார் ரூ.80 கோடி ரூபாய் மதிப்பில் விரைவில் அமைய உள்ளது. இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல. மாறாக, கிருஷ்ணகிரி மக்களின் வெற்றியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கையாகும்"

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x